நெஞ்சு எரிச்சல்

p47

சாப்பிடும்போது, உணவானது உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. உணவு செரிமானம் அடைய இரைப்பையில் அடர் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்கள் உணவுக் குழாய்க்குள் வருவதைத் தடுக்க உணவுக் குழாயில் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. உணவுக் குழாய் விரிவடையும்போதோ, தடுப்பு வால்வு செயல் இழக்கும்போதோ, அமிலம் கலந்த உணவு, உணவுக் குழாய்க்கு வரும். இதையே ‘நெஞ்சு எரிச்சல்’ என்கிறோம்.
இப்படி எப்போதாவது நிகழ்ந்தால,் பிரச்னை இல்லை. வாரத்துக்கு இரண்டு முறையோ அல்லது அன்றாட வாழ்வையே பாதிக்கும் அளவுக்கோ அமிலம் எதுக்களித்தால், அது ஒரு நோய். உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

அறிகுறிகள்

  நெஞ்சு எரிச்சல்

  சில சமயம் தொண்டை வரை எரிச்சல், கூடவே வாயில் புளிப்பான சுவை

  நெஞ்சு வலி

  விழுங்குவதில் சிரமம்

  வறட்டு இருமல்

  தொண்டைக் கரகரப்பு அல்லது தொண்டையில் புண்

  உணவு அல்லது புளிப்புத் திரவம் எதுக்களிப்பு

  தொண்டையில் கட்டி இருப்பது போன்ற உணர்வு

காரணம்

உணவை விழுங்கும்போது உணவுக் குழாயின் அடிப்பகுதி மற்றும் அதனைச் சுற்றி உள்ள தசைகள் விரிந்து உணவானது இரைப்பைக்குள் செல்ல அனுமதிக்கிறது. உணவு உள்ளே சென்றதும் இது தானாக மூடிக்கொள்கிறது. பின்வரும் காரணங்கள் இந்த அமைப்பைப் பாதிக்கின்றன.

  உடல் பருமன்

  இரைப்பையின் மேல் பகுதியில் வீக்கம்

  புகை பிடித்தல்

  கர்ப்பம்

  உலர் வாய்

  ஆஸ்துமா

  சர்க்கரை நோய்

  திசுக்களில் ஏற்படும் நோய்கள்

  மது அருந்துதல்

தொடர்ந்து அமிலம் வெளியேறும்போது உணவுக் குழாயின் உள் சுவர் பாதித்து, வீக்கம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதில் இருந்து ரத்தக் கசிவு, உணவுக் குழாய் சுருக்கம் ஏற்படலாம்.

தவிர்க்க!

வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

ஆரோக்கியமான உடல் எடைப் பராமரிப்பு: அதிகப்படியான எடை வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை அதிகரிக்கும்.  இந்த அழுத்தத்தின் எதிர்மறையாக, அமிலம் உணவுக் குழாய்க்கு வருகிறது. எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இந்தப் பாதிப்பைத் தவிர்க்கலாம்.

இறுக்கமான உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்: இடுப்பில் இறுக்கமாக உடை அணியும்போது அதுவும் அழுத்தத்தை அதிகரிக்கும்.

உணவு: கொழுப்பு நிறைந்த, வறுக்கப்பட்ட உணவுகள் நெஞ்சு எரிச்சலைத் தூண்டுகின்றன. மது, தக்காளி சாஸ், சாக்லெட், பூண்டு, வெங்காயம், காஃபின் பொருட்கள் ஆகியவை நெஞ்சு எரிச்சலைத் தூண்டலாம்.

குறைவாக உட்கொள்ளுதல்: அதிக அளவில் வயிறு புடைக்கச் சாப்பிடுவதற்குப் பதில், சிறிது சிறிதாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தூக்கம்: சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. உணவு உண்ட பிறகு குறைந்தது மூன்று மணி நேரம் கழித்து தூங்கச் செல்ல வேண்டும்.

படுக்கையின் அளவு: படுக்கையின் தலைப்பகுதி சற்று உயர்வாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தலைப்பகுதியை 6 முதல் 9 இன்ச் அளவுக்கு உயர்த்துங்கள். 

சிகரெட்: சிகரெட் புகைப்பது உணவுக் குழாயின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

Leave a Reply