புகைப் பழக்கத்தில் இருந்து மீள்வது மிகக் கடினமான விஷயம் என்பது அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களுக்குத் தெரியும். சிகரெட்டைத் துறக்க நினைப்பவர்களை ‘நிகோட்டின்’ எனப்படும் புகையிலை நச்சுப்பொருள் பாடாய்ப்படுத்தும், கொடுமையான தூண்டுதலை ஏற்படுத்தும்.
கடுமையாக போராடித்தான் அதன் பிடியில் இருந்து மீண்டு வர முடியும். புகைப் பழக்கத்தை விட நினைப்பவர்கள் படிப்படியாக அதை நிறைவேற்றுவதற்குப் பரிந்துரைக்கப் படுவதுதான் ‘நிகோட்டின் சூயிங்கம்’. ஒருநாளைக்கு ஒன்றிரண்டு சிகரெட் புகைப்பவர்கள், தொடர்ச்சியாக சிகரெட் புகைப்பவர்கள் இருவருக்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் இந்த சூயிங்கம் பரிந்துரைக்கப்படுகிறது.
புகைப் பழக்கத்தில் இருந்து இரண்டாம்கட்டமாக இந்த சூயிங்கம்முக்கு மாறி, பின்னர் நிரந்தரமாக நிகோட்டினை துறந்துவிடலாம் என்பது மருத்துவ ஆலோசனை.
இந்த சூயிங்கம்மிலும் நிகோட்டின் உள்ளது என்பதால், டாக்டரின் பரிந்துரையின் பேரில், மருந்தகங்களில் மட்டுமே இதைப் பெற முடியும். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் சாதாரண பெட்டிக்கடைகள் சிலவற்றிலும் இந்த நிகோட்டின் சூயிங்கம் கிடைக்கிறது, யார் வேண்டுமானாலும் பெற முடிகிறது. இந்த சூயிங்கம்மின் ‘சுவை’ அறிந்த மாணவர்கள் பலரும் இதன் வாடிக்கையாளர்களாகி வருகின்றனர். வாயில் இட்டு ஒருமுறை மென்றாலே ‘சுர்’ரென்று ஏறும் என்கின்றனர். விறுவிறுப்பு குறைந்துவிட்டால், மறுபடி ஒருமுறை மென்றால் ‘விறுவிறுப்பு’ கூடுமாம். மென்று, வாயில் ஓரமாக ஒதுக்கிவைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.
ஏற்கனவே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் நிலையில், இந்த சூயிங்கம்மையும் விருப்பம் போல் வாங்க முடிகிறது. இந்நிலையில் இது மாணவர்கள் மத்தியில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூற வேண்டியதில்லை.
சாதாரணமாக சூயிங்கம் மெல்லுவதைப் போலவே இந்த புகையிலை சூயிங்கம்மை அவர்கள் மெல்லக் கூடும். பெற்றோர் படிப்பறிவற்றவர்களாக இருந்தால் அவர்களை எளிதாக ஏமாற்றிவிடக் கூடும்.
மாணவ சமுதாயம் ஏற்கனவே மதுவின் கோர மடியில் மெல்ல மெல்லத் தலை சாய்ந்து வருகிறது என்று வேதனையளிக்கும் செய்திகள் அதிகரித்துவரும் நிலையில், இந்த நிகோட்டின் சூயிங்கம் விற்பனையைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை.
அதேவேளையில், வயதுவந்த பிள்ளைகளது பெற்றோரும் தமது பிள்ளைகளின் பாக்கெட்டுகளை அவ்வப்போது பரிசோதிப்பது நல்லது!