ப.சிதம்பரம் செய்த தேசத்துரோகம் இதுதான். மத்திய அமைச்சரின் திடுக்கிடும் குற்றச்சாட்டு
கடந்த 2004ஆம் ஆண்டு 19 வயது இஷ்ரத் ஜஹான் என்பவர் உள்பட 4 பேர் குஜராத் போலீஸாரால் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர். அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இவர்கள் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக மாநில அரசு இதுகுறித்து கூறியது. ஆனால் பின்னர் இது போலி என்கவுன்ட்டர் என அகமதாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி கடந்த 2009ஆம் ஆண்டு குஜராத் ஐகோர்ட்டில் இஷ்ரத் ஜஹானின் தாயார் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இஷ்ரத், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்றும் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில தினங்களில் இதற்கு முற்றிலும் மாறாக, அது போலி என்கவுன்ட்டர் தான் என உள்துறை அமைச்சகத்தால் துணை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முதல் பிரமாணப் பத்திரம் தனது கவனத்துக்கு வராமல் தாக்கல் செய்யப்பட்டதாக அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
இந்நிலையில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான முதல் பிரமாண பத்திரத்தை ஆங்கில தொலைக்காட்சி சேனல் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் ப.சிதம்பரம் கையொப்பம் இட்டு அங்கீகாரம் அளித்திருப்பது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் செயல் வெளிப்படையாகி உள்ளது. இதனால் நம் நாட்டுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசத்துரோக நடவடிக்கை என்று கூறலாம். இதன் பின்னணியில் மறைந்திருந்த விஷயமும் தற்போது வெளியாகி விட்டது. ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் இதுபோன்ற செயலில் இறங்குவாரா என எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.
இதற்காக அவருக்கு மிகப் பெரிய நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு தீவிரவாத நடவடிக்கைக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு உள்துறை அமைச்சர் இது போல் செய்ய முடியாது. எனவே, இந்த விஷயத்தில் நிர்பந்தம் அளித்தவர்கள் யார் என சிதம்பரம் மற்றும் அவரது கட்சியினர் வெளியிட வேண்டும்” என்று கூறினார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “இஷ்ரத் ஜஹான், லஷ்கர் தீவிரவாதி என்றும் அவரால் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது என்றும் முதல் பிரமாண பத்திரத்தில் இருந்த தகவல் யாருடை உத்தரவினால் பிறகு நீக்கப்பட்டது என்பதை ப.சிதம்பரம் வெளியிட வேண்டும். அப்போது ஆட்சியின் ரிமோட் கன்ட்ரோல் யாரிடம் இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்” என்று சோனியா காந்தியை மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.