அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்பர். மனிதன் கருவில் இருக்கும்போதே இதயத்தின் இயக்கம் துவங்கி விடுகிறது. எவ்வளவு காலம் வாழ்கிறானோ அதுவரை இதயத்தின் வேலை தொடர்கிறது. ஒருகணப்பொழுதும் அது தன் இயக்கத்தை நிறுத்துவதில்லை. நடராஜப்பெருமானும் இவ்வுலகத்தின் மூச்சாக இருந்து எப்போதும் நடம் செய்து இவ்வுலகத்தின் இதயகமலமாய்த் திகழ்கிறார். அவரது ஆட்டம் நின்றுவிட்டால், உலகம் அழிந்து போகும்.
நடராஜரின் கீழே இன்னொரு நடராஜர்: ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். சிதம்பரத்தில் இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பத்தை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? என அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது, நடராஜர் அந்தணர்களிடம், நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள். யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுகிறேன், என வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். ரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.
நடராஜர் சன்னதியில் தீர்த்தம்:
பெருமாள் கோயில்களில் தீர்த்தம் தருவது வழக்கம். ஆனால், சிவாலயமான திருவாலங்காடு நடராஜர் சன்னதியில் தீர்த்தம் தருகின்றனர். நடராஜர், ஊர்த்துவதாண்டவம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். சுவாமி தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து அவர்களை எழுப்பினார். இதனடிப்படையில் இங்கு தீர்த்தம் தரப்படுகிறது.