சிதம்பரத்தில் 17ம் தேதி நாட்டியாஞ்சலி!

1b31frontlight

சிதம்பரம்:சிதம்பரத்தில் மகா சிவராத்திரியையொட்டி, ஒரே சமயத்தில், இரண்டு இடங்களில் நாட்டியாஞ்சலி விழா, வரும் 17ம் தேதி துவங்குகிறது.

கர்நாடக சங்கீதத்திற்கு திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவைப் போல, நாட்டியத்திற்கான விழாவாக நடராஜர் ஆனந்த நடனமாடிய சிதம்பரத்தில், 1981ல் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது.மூத்த வழக்கறிஞர்கள் சம்மந்தம், நடராஜன், சென்னை நாகசாமி உள்ளிட்ட பலர் ஒருங்கிணைந்து, சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று துவங்கி, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் வாயில் அருகே விழா நடந்து வருகிறது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 34ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, மகா சிவராத்திரியான வரும், 17ம் தேதி தெற்கு வீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் துவங்குகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு, நாட்டியாஞ்சலி விழாவிற்கு போட்டியாக, நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டுள்ள தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் அமைப்பு சார்பில், போட்டி நாட்டியாஞ்சலி விழா முதல் முறையாக நடக்க உள்ளது.இந்தப் போட்டி நாட்டியாஞ்சலியும், அதே மகா சிவராத்திரி தினமான, 17ம் தேதி கோவில் கிழக்கு கோபுரம் அருகே நடக்கிறது. தீட்சிதர்களின் இந்த திடீர் முடிவால், சிதம்பரத்தில் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, 33 ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் நடத்தியதை, பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, திடீர் தடை விதித்து, போட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்த திட்ட மிட்டுள்ளது, நாட்டியாஞ்சலி புனித தன்மை குறையும் வாய்ப்பு அதிகரித்துஉள்ளது.

Leave a Reply