ஜெயலலிதா இன்று விடுதலை ஆகிறார். முதல்வர் ஓ.பி.எஸ் பெங்களூர் பயணம்.

jayalalitha releasedபெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 22 நாட்களாக இருந்து  வரும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விடுதலை ஆகிறார். அவரை வரவேற்க அதிமுகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர்களுக்கும் வழங்கிய சிறைதண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு தண்டனையையும் நிறுத்தி வைத்தது. இதனால் ஜாமீன் பெற்ற ஜெயலலிதா நேற்றே சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவு நகலையும், ஜாமீன் உத்தரவாதத்தையும், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம் வழங்கி ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை பெற வேண்டும்.

இதில், உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்து அதை கர்நாடக நீதிமன்றத்தில் அளிப்பதற்கு ஏற்பட்ட காலதாமதத்தை அடுத்து அவர் நேற்று விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் தீர்ப்பு நகல் இன்று கர்நாடக நீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது. நீதிமன்ற நடைமுறைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை பெற்று, அதனை சிறைத்துறை அதிகாரியிடம் வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் திரும்புகிறார்.

ஜெயலலிதா இன்று விடுதலையாவதையொட்டி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனி விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். அதேபோல், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும் பெங்களூரு சிறை அருகில் ஜெயலலிதாவை வரவேற்க மகிழ்ச்சியுடன் முகாமிட்டுள்ளனர்

Leave a Reply