குற்றம் புரியும் சிறுவர்களை என்ன செய்வது? ஒரு அலசல்

crime3_1டெல்லியில் பாலியல் வன்முறையில் மருத்துவ மாணவி ஒருவர் இறந்த பிறகு, பாலியல் வன்கொடுமைக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனையைப் பற்றியும் கொடூரமான குற்றங்களைப் புரியும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனைபற்றியும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் மேனகா காந்தி சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கொடூரமான குற்றங்களைப் புரியும் சிறாரின் வழக்குகள் வயதுவந்தோரின் வழக்குகளைப் போலவே நடத்தப்பட வேண்டும் என்றும், சிறார் என்று கருதப்படுவதற்கான வயது வரம்பு 18-லிருந்து 16-ஆகக் குறைக்கப்பட, சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்குத் தான் முயன்றுவருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் இரண்டு விஷயங்கள் முக்கிய மானவை. ஒன்று, சிறார் யார் என்பதற்கான வயது வரம்பை நிர்ணயிப்பது. இரண்டு, சிறார் கொடூரமான குற்றங்களைப் புரிந்தால் வயதுவந்தோரைப் போலவே சட்டத்தால் அவர்கள் நடத்தப்பட வேண்டுமா என்பது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி உச்சத்தில் இருக்கும் இன்றைய உலகில், ஒரு குழந்தை மனமுதிர்ச்சியை அடைவது என்பது கணிசமாக விரைவு படுத்தப்பட்டிருக்கிறது. 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்னர் 18 வயதில் ஓர் இளைஞனோ இளம்பெண்ணோ அடையும் மனமுதிர்ச்சியை இன்று 14, 15 வயதில் அவர்கள் அடைந்துவிடுகிறார்கள். வெளியுலகுடனான அவர்களுடைய தொடர்புகளும் அதன் மூலம் அவர்கள் பெறும் அனுபவங்களும் முந்தைய தலைமுறையை விடப் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. ஆகவே, கால மாற்றத்துக்கு ஏற்ப வயது வரம்பைச் சில ஆண்டுகள் குறைப்பது என்பது அவசியமானது. அடுத்தபடியாக, கொடூரமான குற்றங்களைப் பொறுத்தவரை சட்டப்படி அவர்கள் சிறாராக இருந்தாலும் வயதுவந்தோரைப் போலவே நடத்தப்பட வேண்டும் என்பதற்கான காரணங் கள் வலுவானவை.

சிறுவர்களும் வல்லுறவுச் சம்பவங்களும்

சமீபத்தில் பஞ்சாப் லூதியானா மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது வகுப்பு மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது ஊடகங்களில் வெளியானது. கடந்த சில ஆண்டுகளில் 10-ம், 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களது வகுப்பு மாணவிகளை மற்றும் ஆசிரியைகளைக்கூட வல்லுறவுக்கு ஆளாக்கிய பல செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சமீப காலங்களில் கும்பல் வல்லுறவுக் குற்றங்களில் ஈடுபட்ட வர்களில் சிலர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும், மிகக் கொடூரமான குற்றங்களுக்குக்கூட சிறாருக்கான தண்டனை அதிகபட்சம் மூன்றாண்டு சீர்திருத்தப் பள்ளி தண்டனை மட்டுமே என்பதால், தங்களை 18 வயதுக்கு உட்பட்டவர்களாகக் காட்ட முயல்வதும் மிகவும் கவலைக்குரிய விஷயங்கள். பாலியல் வல்லுறவிலோ கொலையிலோ ஒரு சிறுவன் ஈடுபடுகிற அந்தக் கணத்திலேயே அவன் சிறுவன் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் உளவியல் அல்லது உயிரியல் அறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஐரோப்பிய முன்மாதிரி

தங்கள் குழந்தைகளை அடித்தால்கூட அல்ல, மிரட்டினால்கூட பெற்றோர்கள் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படும் நிலையுள்ள, குழந்தைகளின் உரிமைகளுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கும் ஐரோப்பிய நாடுகள், இந்த விஷயத்தைக் கையாளும் விதம் இந்தியா பின்பற்றுவதற்கான நல்ல மாதிரி. பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் குழந்தைகள் குற்றமிழைக்கிறபோது, குற்றத்தின் தன்மைக்கு ஏற்றவாறே, அதாவது குற்றம் எவ்வளவு தீவிரமானது என்பதைப் பொறுத்தே தண்டனை நிர்ணயமாகிறது. தான் செய்வது என்ன என்பதை முழுமையாக அறியாத பருவத்தில் ஒரு குழந்தையின் குற்றம் கொடூர

மானதாகவே இருந்தாலும் அதற்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை அளிப்பது தவறு என வாதிடும் குழந்தை உரிமையாளர்கள், மனித உரிமையாளர்கள் பலர் செய்யும் அதே தவறைச் செய்கிறார்கள். அதாவது, தண்டனை

யின் முதன்மையான நோக்கத்தைப் பற்றிய அவர்களது தவறான அணுகுமுறையே இதற்குக் காரணம்.

நான்கு நோக்கங்கள்

எந்தவொரு குற்றத்துக்கும் தண்டனை வழங்கப் படுகிறபோது நான்கு நோக்கங்கள் அல்லது கோட் பாடுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன:

1. குற்றமிழைத்தவர் அதற்குரிய தண்டனையைப் பெற்றாக வேண்டும். அதாவது, குற்றத்தின் தீவிரமும் அதற்கான தண்டனையும் பொருத்தப்பாடு கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே, பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்படும் நீதி.

2. அந்தக் குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தில் ஈடுபட்டு அதனால் பிற அப்பாவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், குற்றவாளியைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவது. அதாவது, சிறையில் அடைப்பது.

3. குற்றமிழைத்தால் தண்டனை நிச்சயம் என்ற நிலை ஏற்படுத்தும் அச்சத்தின் காரணமாகச் சமூகத்தில் உள்ள பிறர் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுப்பது.

4. குற்றவாளியைச் சிறையில் அடைத்துப் பல்வேறு வழிமுறைகள் மூலம் அவரைச் சீர்திருத்திச் சமூகத்தில் மீண்டும் வாழத் தகுதியானவராக ஆக்குவது.

இந்த நான்கு கோட்பாடுகளும் இதே வரிசையிலேயே முக்கி யத்துவம் பெறுகின்றன. ஆனால், மனித/குழந்தை உரிமையாளர்கள் நான்காவது விஷயத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். இதன் காரணமாகவே இவர்கள், தாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் சாதாரணப் பொதுமக்களின் உரிமைகளுக்காக அல்ல; மாறாக குற்றவாளிகளின் உரிமைகளுக்காக மட்டுமே போராடுகிறவர்கள் என்று சித்தரிக்கப்படுவதற்கான வாய்ப்பைப் பிற்போக்குவாதிகளுக்கு வழங்குகிறார்கள்.

கருணை காட்டலாமா?

டெல்லி சம்பவத்தில் அந்த இளம் பெண் இறந்ததற்குக் காரணமே அந்த வழக்கில் ஆகக் குறைவான தண்டனை பெற்ற 18 வயதுக்கு உட்பட்ட இளைஞன்தான். அவன் மட்டும் அந்தப் பெண்ணை மிகக் கொடூரமாக இரும்புக் கழியால் தாக்கியிருக்காவிட்டால், அந்தப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காது. அது மட்டுமல்ல, அந்த ஆறு பேர் கும்பலில் மிகக் கொடூரமாக நடந்துகொண்டவனும் அவனே. அதனால்தான் அந்த இளைஞன் உயிருடன் எரிக்கப்பட வேண்டும் என்று சாகும் தறுவாயில் அந்த மருத்துவ மாணவி கூறினார். சக மனுஷியின் உடல் மற்றும் உயிர் மீது எந்த மதிப்புமற்ற ஒருவன் 18 வயதுக்கு ஓரிரு மாதங்கள் குறைவானவன் என்பதற்காகக் குழந்தையாக மதிக்கப்பட வேண்டும் என்று மனித/குழந்தை உரிமையாளர்கள் கோரும்போது, பாதிக்கப்பட்டவருக்குப் பெரும் அநீதி இழைப்பதுடன் பெரும்பான்மையினரை எதிர்த் தரப்புக்கு விரட்டி, மனித உரிமைகள் என்ற உயரிய கோட்பாட்டுக்கே பெரிதும் தீங்கிழைக்கிறார்கள். சிறு குற்றங்களில் ஈடுபடுகிறவர்களிடம் காட்ட வேண்டிய அணுகுமுறையை இவர்கள் கொடூரமான குற்றவாளிகளுக்குக் கோருவது முற்றிலும் தவறானது.

ஒருவரின் ஆளுமையை நிர்ணயிப்பதில் அவரது சமூக, பொருளாதாரக் காரணிகள் முக்கியப் பங்குவகிக்கின்றன எனில், அவரது மரபணுக்கள் தீர்மானகரமான பங்கை ஆற்றுகின்றன. கொடூரமான குற்றவாளிகளின் விஷயத்தில் இது மேலும் உண்மை. ஆனால், 19-ம் நூற்றாண்டு அறிவியலைத் தாண்டி வர விரும்பாத முற்போக்காளர்களுக்கு இது பிற்போக்குத்தனமானதாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. கொடூரமான ஒரு குற்றவாளி திருந்திவிட்டாரா இல்லையா என்பதை உறுதியாகத் தீர்மானிக்க நம்மிடம் அறிவியல் அல்லது உளவியல்ரீதியிலான சோதனைகள் ஏதுமில்லை. அப்படியே தீர்மானிக்க முடிந்தாலும் அவரை சுமார் 16 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்வது என்பது அவரது கொடூரத்தால் உயிரிழந்த அப்பாவி மனிதருக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி.

சிறைத்தண்டனையின் அளவு குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப இருப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச நீதி.

Leave a Reply