ஊசியோடு போராடும் குழந்தைகள்

p38

சர்க்கரை நோய் என்றதும், நடுத்தர வயது தாண்டி வரும்   டைப் 2  சர்க்கரை நோய் மட்டும்தான் நமக்குத் தெரியும். அதைவிடத் தீவிரமான கவனிப்பு தேவைப்படுவது, குழந்தைகளிடம் காணப்படும் டைப் 1 சர்க்கரை நோய். டைப் 2 சர்க்கரை நோயில் இன்சுலின் சுரக்கும். ஆனால் சரியாக வேலை செய்யாது.

டைப்1ல் இன்சுலின் சுரப்பே இருக்காது. மாத்திரைகளும் பலன் தராது. சர்க்கரை நோய் கண்டறியப்பட்ட நாளில் இருந்தே இன்சுலினை ஊசி மூலம் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுக்க இவர்கள் இன்சுலினை நம்பியே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பொதுவாக, டைப்  1 சர்க்கரை நோய், ஒரு வயது குழந்தைகள் முதல் காணப்படுகிறது. இதற்கு ஊசி மூலம் இன்சுலினை ஏற்றுவது மட்டுமே சிகிச்சைமுறை. ஊசி போடத் தவறும்பட்சத்தில், அந்தக் குழந்தையின் உடல்நிலை, 48 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்துக்குள் தீவிர சிகிச்சை தரும் அளவுக்கு மோசமடையும். இப்போதைக்கு வேறு வைத்தியம் எதுவும் கிடையாது.

அறிகுறிகள்:

இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நிறைய சாப்பிடுவார்கள். சோர்ந்துபோய் காணப்படுவார்கள். அடிக்கடி அதிகமாகச் சிறுநீர் கழிப்பார்கள். அதிகமாக உடல் இளைத்துப்போவார்கள். இவை ஆரம்ப நிலை அறிகுறிகள் மட்டுமே. 50 சதவிகிதம் பேர்தான் இந்த அறிகுறிகளிலேயே கண்டுபிடிக்கும் அளவுக்கு இருப்பார்கள். மீதம் உள்ளவர்கள்  தீவிரமாகப் பாதிக்கப்பட்ட பிறகு, வலிப்பு, மூச்சு வாங்குதல் என மிகவும் நோய்வாய்ப்பட்டோ அல்லது கோமா நிலையிலோதான் வருவார்கள்.

ஆரம்ப அறிகுறிகளிலேயே மருத்துவரிடம் போய்விட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துவிட்டு, சிகிச்சையைத் தொடங்கிவிடலாம். குழந்தைக்கு இந்த நோய் இருக்கிறது என்று கண்டறிந்தவுடன், தினமும் இரண்டு ஊசி போட வேண்டும். பிஞ்சு சருமத்தில் ஊசி போடுவதை நினைத்து, பெற்றோர் தயங்கி, நாட்டு வைத்தியம், கைவைத்தியம் போன்ற சிகிச்சைக்குப் போய்விடுகின்றனர். எதிலும் பலன் இல்லாமல், குழந்தையின் உடல்நிலை மோசமான பிறகு, ஆபத்தான நிலையில் தூக்கிக்கொண்டு வருகின்றனர்.

காரணங்கள்:

பொதுவாக, குழந்தைகள் உடலில் காய்ச்சல், சளி வந்தால், அவற்றை எதிர்க்க உடலில் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு அணுக்கள் இருக்கும். சில குழந்தைகளின் உடலில், கணையத்தில் இருக்கும் நோய் எதிர் அணுக்கள், இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்லை அழித்துவிடும். ஒருமுறை அதை அழித்துவிட்டால், மீண்டும் அவற்றால் இன்சுலின் உற்பத்தி செய்யவே முடியாது.

தாய்க்கு டைப் 1  சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைக்கு வருவதற்கு 3 சதவிகிதமும், தந்தைக்கு இருந்தால் 6 சதவிகிதமும் வாய்ப்புகள் உண்டு. பெற்றோர் இருவருக்குமே டைப் 1 சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைக்கு வர 11 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் வேறு யாருக்கேனும் இருந்தால், மரபியல் ரீதியாக வருவதற்கான வாய்ப்புகள் 5 சதவிகிதத்துக்கும் குறைவு. வாழ்க்கைமுறை மாற்றங்கள், மன அழுத்தம் போன்றவற்றால் டைப் 1 வர வாய்ப்பு இல்லை.’

உணவுக் கட்டுப்பாடு:

” இந்த நோய் இருந்தாலுமே, குழந்தைகள் வளரும் பருவத்தில் இருப்பவர்கள் என்பதால், கண்டிப்பாக சத்தான உணவு தேவை. நாள் ஒன்றுக்கு 3 வேளை வழக்கமான சரிவிகித உணவும், 3 வேளை சிறு உணவும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை இருக்கிறதே என்று பயந்து சாப்பிடாமல் இருக்கவேண்டாம். நன்றாகச் சாப்பிடலாம். ஆனால், அதற்கேற்ப இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள்தான் கவனமாக அதைச் செய்ய வேண்டும்.அரிசிக்கும் கோதுமைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. சப்பாத்தியிலும் மாவுச்சத்து இருக்கிறது. அரிசி சாதமே சாப்பிடலாம். ஆனால், பாலீஷ் செய்யப்பட்ட அரிசியைவிட, கைகுத்தல் அரிசி, சிவப்பு அரிசி போன்றவை நல்லது.  வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது எல்லோருக்குமே நல்லது. டைப் 1 சர்க்கரை நோய் வந்த குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போல நன்றாக ஓடி, ஆடி விளையாடலாம். எல்லா விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம். ஆனால், மிகவும் சோர்வடையும்போது மட்டும் என்ன செய்யவேண்டும் என்பதை நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்’. 

டாக்டர் ரெமா சந்திரமோகன், பேராசிரியர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை.

இந்திய அளவில் எத்தனை குழந்தைகளுக்கு இந்தச் சர்க்கரை நோய் இருக்கிறது என்ற சரியான புள்ளிவிவரம் இல்லை. ஆனால், சென்னை  குழந்தைகள் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவு தொடங்கியது முதல், இந்த 15 ஆண்டுகளில் 627 குழந்தைகள் பதிவாகி இருக்கின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் சிகிச்சைக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கை 37”

டைப் 1 சர்க்கரை நோய்  என்ன செய்ய வேண்டும்?  

சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் தேவி ஏ. நாராயண்

விளையாடப் போகும்போது, உடல்திறன் அதிகம் தேவைப்படும் என்பதால், அதற்கேற்ப ஆகாரம் கொடுத்து அனுப்பவேண்டும். இவர்களுக்குப் புரதச்சத்து அதிகம் தேவை. தினமும் ஏதேனும் ஒரு சுண்டல் கட்டாயம் தரவேண்டும்.

 பள்ளி ஆசிரியர்களுக்குக் கண்டிப்பாக இந்த டைப் 1 சர்க்கரை நோய் பற்றிய விழிப்புஉணர்வைக் கொடுக்கவேண்டும். ஏனெனில், இந்தக் குழந்தைகளுக்கு ரத்தத்தில் திடீரென சர்க்கரை அளவு குறைந்தால், உடல் வியர்த்துக் கொட்டும். களைப்புடன் காணப்படுவார்கள். ஒரு நிலையில் நில்லாமல் அப்படியே ஆடுவதுபோல உடல் அசைந்துகொண்டே இருக்கும். சாதாரணமாக இல்லாமல், கொஞ்சம் எரிச்சலுடன் இருப்பார்கள். உடனடியாக சர்க்கரை அளவைப் பரிசோதித்து (பரிசோதிக்க வாய்ப்பு இல்லை என்றாலும்கூட), அவர்களுக்கு குளூக்கோஸ் தண்ணீர், சர்க்கரைத் தண்ணீர், ஜூஸ் போன்ற ஏதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டும்.

 குழந்தைகளுக்கு 10 வயது வரை பெற்றோர்கள்தான் இன்சுலின் ஊசி போடவேண்டும். 10 வயதுக்கு மேல், குழந்தைகள் அவர்களே போட்டுக்கொள்ளலாம். தங்களுக்குச் சர்க்கரை நோய் இருப்பதை வெளியே சொல்ல வெட்கப்படும் பல குழந்தைகள், பெரும்பாலும் பள்ளியில் கழிப்பறைகளில் போய் ஊசி போட்டுக்கொள்கிறார்கள். இதனால் பலவித நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.  இதைத் தடுக்க, சர்க்கரை நோய் இருப்பதை அவமானமாகக் கருத வேண்டாம்.  எந்தத் தயக்கமும் தேவை இல்லை என்ற மனப்போக்கைக் குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கும் இதுகுறித்த புரிதல் வேண்டும்.

 

Leave a Reply