5 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்ய ஊர்மக்கள் முடிவு: தடுத்து நிறுத்த சிறுமியின் பெற்றோர் கதறல்
மத்திய பிரதேச மாநிலத்தில் கன்றுக்குட்டியை கொலை செய்ததற்கு தண்டனையாக 5 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் குனா என்ற மாவட்டத்தில் உள்ள தாராபூர் என்ற கிராமத்தில் பஞ்சாரா என்ற சமுதாய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 5 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளார். இதனை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட கூடுதல் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எங்களது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டி ஒன்றை எனது கணவர் கல்லால் அடித்து கொன்றுவிட்டார். இதனையடுத்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் எங்களது குடும்பத்தை ஒதுக்கி வைத்தனர்.
அதோடு, ஊர்மக்களுக்கு விருந்து கொடுக்கவும், யாத்திரைக்கு செல்லவும் ஒப்புக்கொண்டோம். அதன் பிறகும் கூட ஊர் மக்கள் எங்களை ஒதுக்கி வைத்தனர். கன்றுக்குட்டியை கொன்றதால் தான் இந்த ஊர் இளைஞர்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று எங்கள் குடும்பத்தை ஊர்மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் நாங்கள் செய்த பாவம் நீங்க வேண்டுமானால், எங்களது 5 வயது மகளை, விதிஷா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஊர்மக்கள் எங்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர். எனவே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கூடுதல் மாவட்ட ஆட்சியர் நியாஸ் கான் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்,