இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி. பொதுமக்கள் மகிழ்ச்சி
உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெயரை பெற்றுள்ள சீனாவில் கடந்த பல ஆண்டுகளாக ஒரு குழந்தைக்கு மேல் தம்பதிகள் பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தடை தற்போது நீக்கப்பட்டு, ஒவ்வொரு தம்பதியினர்களும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீன மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 1979ஆம் ஆண்டு முதல் சீனாவில், தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாகவும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாகவும் புள்ளி விபரங்கள் கூறின. இதனால் சீனாவில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலை நீடிப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல என பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு அறிவுரை கூறினர்.
இதையடுத்து சீன கம்யூனிஸ்ட் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இனிமேல் எல்லா தம்பதிகளும் இனி 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு நிலவரப்படி சீனாவின் மக்கள் தொகை 139 கோடி பேர் என்பது குறிப்பிடத்தக்கது.