திபெத் நாட்டின் புத்த மத தலைவராக இருந்து வரும் தலாய்லாமாவை இலங்கைக்கு அழைக்க ஒருசில புத்த மத தலைவர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில் அவர் இலங்கைக்குள் நுழைய இலங்கை அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருப்பதாக ஏற்கனவே தலாய்லாமா மீது குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், அவர் இலங்கைக்கு வந்தால், அது சீனாவின் வெறுப்புக்கும், கோபத்துக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என எண்ணியே இலங்கை அரசு, தலாய்லாமாவை அழைக்க தடை விதித்துள்ளதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கை அரசின் இந்த முடிவு குறித்து சீனா மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், இலங்கை அரசுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுணியிங் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘தலாய்லாமா விவகாரத்தில் எங்களின் நிலையை நாங்கள் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறோம். அவர் எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்’
‘இலங்கை எங்களுக்கு அருகில் உள்ள நட்பு நாடு. இந்த விவகாரத்தில் சீனாவின் கவலையை அவர்கள் புரிந்து கொண்டிருப்பதுடன், அதை மதிக்கவும் செய்கின்றனர். அதற்காக பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் பாரம்பரிய நட்பை வலுப்படுத்த கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறோம்’ என்றார்.