சீனாவில் 57 தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை வெறும் 19 நாட்களில் கட்டி சாதனை புரிந்துள்ளனர். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சாங்சா என்ற நகரில் 220 தளங்கள் கொண்ட ஒரு கட்டிடம் கட்ட தனியார் நிறுவனம் ஒன்று முடிவு செய்தது. ஆனால் அருகில் விமான நிலையம் இருந்ததால் அந்த பகுதியின் அதிகாரி அந்த கட்டிடத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் அந்த நிறுவனம் அந்த கட்டிடத்தை 57 மாடிகளாக கட்ட முடிவு செய்தது.
800 அபார்ட்மெண்ட் வீடுகள், 57 தளங்கள், அலுவலக பகுதிகள், ஆகியவைகள் கொண்ட அந்த கட்டிடம் வெறும் 19 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 3 தளங்கள் வீதம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க இரவு பகலாக சுமார் 4000 ஊழியர்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
இந்த சாதனையை கின்னஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளதாகவும், விரைவில் தங்களுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இந்த கட்டிடத்தை கட்டிய தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.