அருணாச்சல பிரதேசத்திற்கு ‘தெற்கு திபெத்’ என்று புதிய வைத்த சீனா
திபெத் நாட்டை அடாவடியாக அபகரித்து கொண்ட சீனா திபெத்தையும் தாண்டி அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கும் கடந்த சில ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகிறது.அவ்வப்போது எல்லை தாண்டி வரும் சீன படையினர் அட்டுழியங்கள் செய்து கொண்டிருக்கும் நிலையில் அருணாச்சலப் பிரதேசம் உள்பட ஒருசில இந்திய பகுதிகளுக்கு, தெற்கு திபெத் என அந்நாடு பெயர் சூட்டியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் தலாய் லாமா பங்கேற்ற மத நிகழ்ச்சிக்கு, இந்தியா அனுமதி அளித்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சீனா, இருதரப்பு உறவு கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையை அடுத்து தற்போது அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 6 இந்திய பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சூட்டியுள்ளதாகவும், அவை சீனாவுக்கு சொந்தமானவை எனவும் கூறி, சீன குடியேற்றத் துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சீன மற்றும் ரோமானிய எழுத்துகளை கலந்து, Wo’gyainling, Mila Ri, Qoidengarbo Ri, Mainquka, Bumo La and Namkapub Ri ஆகிய பெயர்களை அந்நாடு சூட்டியுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, தெற்கு திபெத் என அழைக்கப்படும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் இந்த செயலால் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுதொடர்பாக, அந்நாடு விரைவில் வரைபடம் ஒன்றையும் வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சீனாவை ராஜாங்க ரீதியாக எதிர்கொள்வது பற்றி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும், வெளியுறவு அதிகாரிகளும் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.