சீன நாணயத்தின் மதிப்பில் வீழ்ச்சி. நாணய போருக்கு வழி வகுக்குமா?
உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெயர் பெற்றுள்ள சீனா, சமீபகாலமாக மந்தமான பொருளாதார நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அந்த நாட்டின் ஏற்றுமதியின் அளவும் சரியத்தொடங்கியதால், அமெரிக்க டாலருக்கு நிகரான சீன யுவானின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் அதிரடியாக 1.99 சதவீத அளவுக்கு சீனா தன்னுடைய யுவானின் மதிப்பை குறைத்தது. கடந்த 3 ஆண்டுகளில் யுவானின் மதிப்பு இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்பட்டது. இந்த நாணய மதிப்பின் வீழ்ச்சி, ஏற்றுமதியைப் பெருக்கும் என்றும் வெளிநாட்டு சந்தைகளில் சீனப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் என்று சீனா எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 1.6 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு டாலர், 6.33 யுவான் என்ற நிலையில் அதன் மதிப்பு உள்ளது. இது தொடர்பாக சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கையில், “நாணய வீதத்தை ஸ்திரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்போம். யுவானின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்திக்கும் என நம்புவதற்கு அடிப்படை இல்லை” என கூறப்பட்டுள்ளது.
சீனா தொடர்ந்து 2-வது நாளாக நாணயத்தின் மதிப்பை குறைத்திருப்பது 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலக்கட்டத்தில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. சீனா செயற்கையாக நாணயத்தின் மதிப்பை குறைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிற வேளையில், இப்போது சீனா 2 நாட்கள் தொடர்ந்து நாணயத்தின் மதிப்பை குறைத்திருப்பது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இருப்பினும் சர்வதேச நிதியம் ‘ஐ.எம்.எப்.’ சீனாவின் நடவடிக்கையை பாராட்டி உள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என அது கூறி உள்ளது. சீனாவை பின்பற்றி பிற ஆசிய நாடுகளும் தங்களது நாணயத்தின் மதிப்பை குறைக்க தொடங்கினால், அது நாணய போருக்கு வழி வகுத்து விடும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். எனவே இந்த நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.