சீனா தலைநகர் பீஜிங்கில் சுமார் 4 லட்சம் மக்களை வெளியேற்ற சீனா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தலைநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரது நெரிசலை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சீன தலைநகர் பீஜிங் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு நச்சுத்தன்மை வாய்ந்த புகை மண்டலம் திரண்டதால் மக்களுக்கு நோய்கள் தொற்றும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பீஜிங் நகர மையப்பகுதியில் இருந்து 40 நிமிட பயணத்தில் சென்று சேரும் வகையில் புதிய புறநகர் பகுதி ஒன்று டாங்சோவுக்கு அருகில் உருவாக்கப்பட்டு வருகிறது.
வரும் 2017-ம் ஆண்டுக்குள் இந்த புறநகர் மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் மக்கள் இடம்பெயர உள்ளனர். இதன்மூலமாக, பீஜிங் நகரப்பகுதி பிரச்சினைகளை குறைப்பதுடன், நகரத்தில் மக்கள்தொகை பெருக்கத்தையும் குறைக்க முடியும் என மாநகர முனிசிபல் கமிஷன் எதிர்பார்க்கிறது.
2014-ம் ஆண்டு நிலவரப்படி பீஜிங் நகரில் 21.5 மில்லியன் அளவுக்கு மக்கள்தொகை உள்ளது. 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அங்கு ஓடிக்கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டுக்குள் பீஜிங் நகரில் மட்டும் 6 மில்லியன் கார்கள் சாலைகளில் ஓடும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.