பாகிஸ்தான் பெரிய அளவில் தியாகம் செய்துள்ளது. மோடிக்கு சீனா பதிலடி
சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு பாகிஸ்தானே அமைதியாக இருக்கும் நிலையில் அதன் நட்பு நாடான சீனா பதிலடி தரும் வகையில் ஒரு கருத்தை கூறியுள்ளது.
சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இதுகுறித்து கூறியபோது, ”தீவிரவாதத்துடன் எந்த நாட்டையும் இணைத்துப் பேசுவதை சீனா விரும்பவில்லை. தீவிரவாதத்தை எதிர்ப்பதில் நாங்கள் சீரான நிலையை கடைபிடித்து வருகிறோம். இதேபோல்தான், தீவிரவாதத்தை மதம் மற்றும் எந்த நாட்டுடனும் இணைத்துப் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை. எதிர்க்கிறோம்.
அனைத்து வகையிலான தீவிரவாதத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க முன் வரவேண்டும்.
தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் பெரிய அளவில் தியாகம் செய்துள்ளது. இதை சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் சீனாவின் அண்டை நாடுகள். இவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை அமைதியான முறையில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.