சீன பொருட்களை தவிர்த்தால் இந்தியாவுக்கு சிக்கல். சீன தூதரகம் எச்சரிக்கை
சீனாவின் பொருட்களை இந்தியர்கள் தவிர்க்கும் எண்ணம் தற்போது வலுவாகி வருவதாகவும் இந்த போக்கு இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் சீன தூதரகம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அருணாச்சல பிரதேச பிரச்சனை, பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது உள்பட பல விஷயங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்து வருவதால் சமூக வலைத்தளங்களில் சீனாவுக்கும் சீன பொருட்களுக்கும் எதிராக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. குறிப்பாக சீன பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் தண்டனை என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களது நாட்டை இந்தியர்கள் தவிர்ப்பது நல்லது அல்ல என்று சீன தூதரகம் கூறியுள்ளது. இதுகுறித்து மேலும் சீனத்தூதரகம் கூறியதாவது:
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை இந்தியாவில் மவுசு குறைந்து வருகிறது. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் சீனப்பொருட்களை இந்தியாவில் விற்பதை எதிர்த்து பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், சீனத் தயாரிப்புகளை தவிர்ப்பது இந்தியாவுக்குத் தான் சிக்கலை உண்டாக்கும்
சீனா பொருட்களை இந்தியா புறக்கணித்தால், சீனா இந்தியாவில் முதலீடு செய்வது பாதிக்கப்படும். மேலும், இருநாடுகளின் பொருளாதார உறவும் பலவீனமடையும். அதனால், சீனாவின் தயாரிப்புகளைத் தவிர்ப்பதால் இந்திய வியாபாரிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தான் இழப்பு என்று கூறியுள்ளது.
இருப்பினும் சீன தூதரகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாது இந்தியாவில் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.