பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டே வருவதால் இதற்கு மாற்று எரிபொருள் கண்டிபிடிக்க வேண்டும் என உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதன்முதலாக பேட்டரியில் இயங்கும் விமானம் ஒன்றை சீன நாட்டு விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளது.
14.5 மீட்டர் அளவில் நீளமான இறக்கைகள் கொண்ட இந்த விமானம் 3000 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது என்றும் இந்த விமானத்தை பயிற்சி, சுற்றுலா, வானிலை, மற்றும் மீட்புப்பணிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
பி.எக்ஸ் 1இ(BX1E) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் அதிகபட்சமாக 230 கிலோ வரையிலான எடையை சுமந்து செல்லும். இந்த விமானத்தை 2 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சம் 160 கிலோ மீட்டர் வேகத்தில் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை பயணிக்க முடியும்.
சீனாவின் வடகிழக்கு லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோனிங் பொது விமான அகடமி மற்றும் சென்யாங் விண்வெளி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் குழு ஒன்று இணைந்து இந்த விமானத்தை தயாரித்துள்ளதாக சீன ஊடகமான சின்குவா தெரிவித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த லியோனிங் ருக்சியாங் பொது விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு இந்த வகை விமானங்கள் இரண்டு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது.