இந்திய குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டதற்கு பதிலடியாக சீனா, தன்னுடைய நாட்டில் நடைபெறவுள்ள ராணுவ அணிவகுப்புக்கு ரஷ்ய அதிபர் புதினை அழைத்துள்ளது.
சீனாவுக்கு அமெரிக்காவுக்கும் தீவிர பகைமை உள்ள நிலையில் இந்தியா, அமெரிக்க அதிபரை குடியரசு தினவிழாவுக்கு அழைத்ததை சீனா ரசிக்கவில்லை. அமெரிக்காவின் ஆசை வார்த்தைகளை நம்பி இந்தியா ஏமாற வேண்டாம் என்று சீனா எச்சரிக்கையும் விடுத்தது.
ஆனால் இந்தியா, அமெரிக்க அதிபரை அழைத்து வந்து கெளரவித்ததோடு, மட்டுமின்றி ஒபாமா நான்கு பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்தது ஆகியவை சீனாவை எரிச்சலடைய செய்துள்ளது.
எனவே இதற்கு பதிலடியாக இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் ரஷ்யாவை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக, சீனத்தலைநகர் பீஜிங்கில் நடைபெற இருக்கும் இரண்டாவது உலகப்போரில் வெற்றியடைந்ததன் 70வது ஆண்டு நினைவாக நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு ரஷ்ய அதிபர் புதினை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.
இந்தப் போர்நினைவு நிகழ்ச்சிக்கு புதின் உள்பட ரஷ்ய நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றும் சீன ராணுவ அணிவகுப்பை வெளிநாட்டுத் தலைவர்கள் பார்வையிடுவது இதுவே முதன்முறை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.