இந்திய-சீன எல்லை பிரச்சனை. பிரதமர் மோடியின் கோரிக்கையை நிராகரித்தது சீனா.

modi in chinaசமீபத்தில் மூன்று நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றபோது எல்லைப் பிரச்சினையில், தற்போது இருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில், தனது நிலைகள் எங்கெல்லாம் உள்ளன‌ என்பதைத் சீனா தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த கோரிக்கையை சீனா நிராகரித்ததோடு, எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் போட சீனா வலியுறுத்தியுள்ளதால் பிரதமர் மோடியின் சீனப்பயணம் தோல்வியில் முடிந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆசிய விவகாரங்கள் பிரிவு இணை இயக்குநர் ஹுவாங் சிலியான் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “எல்லைப் பிரச்சினையில் சீனா மேற்கொள்கிற நடவடிக்கைகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமானது.  எல்லைப் பிரச்சினையில் இரு நாடுகளும் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை,  பிரச்சனைகளை தீர்க்கும் படிக்கற்களாக இருக்க வேண்டுமே தவிர தடைக்கற்களாக இருக்கக் கூடாது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பிரச்சினையில் தெளிவு ஏற்பட்டால், பின்னர் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். மாறாக, குழப்பமான மனநிலையில் இருந்தால், அது பிரச்சினையை மேலும் சிக்க லாக்கும்.

எல்லைப் பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வு என்பதை நாங்கள் விரும்பவில்லை. மாறாக, பலவிதமான தீர்வுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்கு இரு நாடுகளுக்கிடையே ‘நடத்தை முறை’ ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். இந்தப் பிரச்சினையில் தீர்வு காண இரு நாடுகளுக்கும் இன்னும் நிறைய அவகாசம் இருக்கிறது.

எல்லையில், சீனாவின் நிலைகள் எங்கெல்லாம் அமைந்துள்ளன என்பது குறித்து இந்திய பிரதமர் மோடி கேட்டிருந்தார். நாங்கள் அவற்றை வெளிப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம், முந்தைய காலங்களில் அவ்வாறு வெளிப்படுத்தியதால் நாங்கள் சில இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் கிமீ தூர எல்லை மட்டுமே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள எல்லைப் பிரச்சினை என்று சீனா கூறுகிறது. ஆனால் சுமார் 4 ஆயிரம் கிமீ தூர எல்லைப் பிரச்சினை இதில் அடங்கியிருக்கிறது என இந்தியா கருதுகிறது.

Leave a Reply