அடுத்த நாடுகளின் விவகாரத்தில் தலையிட கூடாது. டிரம்புக்கு சீனா எச்சரிக்கை
அமெரிக்காவின் புதிய அதிபராக யாரும் எதிர்பாராத வகையில் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாடுகளின் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட கூடாது என்று டிரம்புக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது சீனாவை கடுமையாக விமர்சனம் செய்த டொனால்ட் டிரம்ப், பதவியேற்றதும் சீனாவுக்கு எதிராக ஒருசில அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சீனாவுடன் ஆரோக்கியமாக பணி செய்வதை தவிர்த்து தனிமைப்படுத்தல், அடுத்த நாடுகளின் விவகாரங்களில் தலையிடல் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது என்று சீனா இன்று டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கை குறித்து டிரம்ப் கருத்து சொல்ல மறுத்துவிட்டார். பதவி ஏற்றவுடன் தான் அவர் கருத்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.