அமெரிக்கா-வடகொரியா போர் மூண்டால் யாருக்கும் வெற்றி கிடைக்காது. சீனா
ஆப்கானிஸ்தான் மீது சமீபத்தில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்திய அமெரிக்கா மிக விரைவில் வடகொரியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அண்டை நாடான தென்கொரியா உள்பட உலக நாடுகளை அணுஆயுதங்களால் அச்சுறுத்தி வரும் வடகொரியா, ஐ.நா.சபை விதித்த பொருளாதார தடைகளை மீறி அவ்வப்போது அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. எனவே வடகொரியாவின் கொட்டத்தை அடக்க அமெரிக்கா வடகொரியா மீது தாக்குதலில் ஈடுபடலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து, சீன வெளியுறவு மந்திரி வாங் யி நேற்று பெய்ஜிங் நகரில் பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜீன் மார்க்குடன் கூட்டாக அளித்த பேட்டியில், “வடகொரிய விவகாரத்தில் எந்த நேரத்திலும் போர் மூளலாம். இந்த போரில் யாருக்கும் வெற்றி கிடைக்கப்போவதில்லை. இதனால் இப்பிராந்தியத்தில் பதற்றம்தான் ஏற்படும். எனவே பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்” என்று கூறினார்
இதற்கிடையே வடகொரியா மீது அமெரிக்கா போரைத் தொடங்கினால், தென்கொரியாவில் வசிக்கும் தனது நாட்டின் 60 ஆயிரம் குடிமக்களை எப்படி பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பது குறித்து ஜப்பான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் நேற்று தீவிர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.