சீனாவில் இயங்கி வரும் பிரபல நிறுவனம் ஒன்று தனது பெண் ஊழியர்களிடம் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெறாமல் கர்ப்பம் தரிக்க கூடாது என்றும் அவ்வாறு கர்ப்பம் தரித்தால் 1000 யுவான் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஹேனான் என்ற பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மிகப்பெரிய தனியார் நிறுவனம் ஒன்று தங்களிடம் ஊழியராக பணிபுரியும் இளம்பெண்களுக்கு சமீபத்தில் பல கட்டளைகளை விதித்திருக்கிறது. அவற்றின்படி ஒரு பெண் ஊழியர் கர்ப்பம் தரிக்கும் எண்ணம் இருந்தால், குழந்தை பெறுவதற்கான கால அளவை தெரிவித்து முன்அனுமதி பெற வேண்டும் என்றும் அவ்வாறு கொடுக்கப்படும் கால அவகாசத்திற்குள் குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் பணியில் இணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், அந்நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் அவ்வாறு நிறுவனம் கொடுக்கும் கால அவகாசத்துக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பது சாத்தியமில்லை என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
அந்நிறுவனத்தில் ஒரு வருடத்துக்கு மேல் வேலை செய்யும் பணியாளர்களில் திருமணம் ஆனவர்கள் மட்டும் குறிப்பிட்ட அவகாசத்தில் கர்ப்பம் தரிக்க அனுமதிக்கபடுவார்கள் எனவும், பிறப்பு திட்டத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், வேலையை கெடுத்துக்கொண்டு, பிறப்பு திட்டத்தை கைவிட்டு கர்ப்பம் தரிப்பவர்களுக்கு 1,000 யூவான் அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், அவர்கள் சம்பள போனஸ் மற்றும் உயர் பதவி அல்லது பரிசுகளையும் இழக்க நேரிடும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.
வேலை செய்பவர்களை மனிதர்களாக பாராமல், அவர்களை வெறும் உற்பத்தியை பெருக்கும் கருவியாக கருதுவதாக அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சனம் செய்தன. இதுபற்றி அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பதிலளிக்கும்போது, இது வெறும் வரைவு எனவும், வேலை செய்பவர்களின் கருத்துக்காகவே அனுப்பப்பட்டது என பல்டியடித்தார்.