அருணாச்சல பிரதேசத்தை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் சீனா ஆக்கிரமிப்பா?

அருணாச்சல பிரதேசத்தை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் சீனா ஆக்கிரமிப்பா?

chinaஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தின் ஒருசில பகுதிகளை சொந்தம் கொண்டாடி வரும் சீனா தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் அத்துமீறி 350 கிமீ தொலைவுக்கு எல்லையை ஆக்கிரமித்துள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது.

1962-ஆம் ஆண்டு இந்திய-சீன போருக்குப் பின்னர் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்ட எல்லையில் ஆயுதங்களுடன் கண்காணிப்புப் பணி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டனர். எனினும், 2000-ஆவது ஆண்டு இருநாடுகளிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஆயுதங்கள் இல்லாமல் துணை ராணுவப்படை கண்காணிக்கும் என்று இந்தியா ஒப்புக்கொண்டது.

இதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வந்ததாகவும் அந்தப்பகுதியில் வான் வழியையும் சீனா பயன்படுத்தி வந்ததாகவும் மத்திய அரசுக்கு தகவல் வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் சமோலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோர் சர்ச்சைக்குரிய பகுதிக்குச் சென்ற போது, அந்த பகுதியில் சீன ராணுவத்தினர் ஆயுதங்களுடன் முகாமிட்டிருப்பது மட்டுமின்றி
அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்களிடம், அது சீனாவுக்குச் சொந்தமான வுஜி என்று பகுதி என்று கூறி விரட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இது குறித்து உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறுகையில், “உத்தரகண்ட் எல்லை மிகவும் அமைதியாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சீன ராணுவத்தின் நடவடிக்கை கவலையளிப்பதாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜீஜு தெரிவித்தார்.

Leave a Reply