ஜப்பான் கடல்பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக்கப்பல். இந்திய கப்பலை உளவு பார்த்ததா?
அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து போர் ஒத்திகையில் இந்திய கடற்படைக் கப்பல்களை ஈடுபட்டு வருகின்றன. இந்த கப்பல்களை நேற்று சீன உளவுக் கப்பல் பின்தொடர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படைக் கப்பல்களுடன், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் கடற்படை கப்பல்களும் கூட்டாக “மலபார் ஒத்திகை’ என்ற பெயரில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ஒத்திகையில், இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான 2 கப்பல்கள் பங்கேற்றுள்ளன.
இந்தியக் கடற்படைக் கப்பல்களை சீனாவின் உளவுக் கப்பல் கண்காணித்தபடி பின்தொடர்ந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஜென் நகாடானி கூறுகையில், “ஜப்பானின் பி-3சி ரோந்து விமானம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒத்திகையில் ஈடுபட்டிருக்கும் 2 இந்தியக் கப்பல்களை பின்தொடர்ந்து சீனாவின் தோங்தியாவோ ரக உளவுக் கப்பல் ஜப்பான் கடற்பகுதிக்குள் அதிகாலை 3.30 மணிக்கு வந்தது கண்டறியப்பட்டது’ என்று கூறினார்.
ஜப்பான் கடற்பகுதியில் ஏற்கனவே கடந்த 2004ஆம் ஆண்டில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் நுழைந்தது. அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து சீனக் கப்பல் ஒன்று ஜப்பான் கடற்பகுதிக்குள் மீண்டும் தற்போது நுழைந்துள்ளது.
இந்த அத்துமீறல் குறித்து ஜப்பானுக்கான சீனத் தூதரகத்தில் ஜப்பான் அரசு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதேசமயம், சீன அதிகாரிகள் தங்களது நாட்டுக் கப்பல்கள் சர்வதேச விதிகளுக்கு உள்பட்டே இயக்கப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளனர்.