குழந்தைகளின் ஆரோக்கியம் உங்கள் கையில்!

Baby

இக்கால குழந்தைகள் பெரியவர்களின் மொபைல் போனில் விளையாடுவதும், ஸ்கூல் விட்டு வந்தவுடன் தொலைக்காட்சி காண்பதில் அதிக கவனம் செலுத்துவதும், இன்டர்நெட்டில் நேரம் போக்கு வதும் ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் காணும் காட்சியே. இதனால் குழந்தைகளின் உடல்நிலை, ஆரோக்கியம் எந்த அளவு பாதிக்கப்படுகிறது என அறிந்து, ஒவ்வொரு பெற்றோ ரும் கவலையைத் தாண்டி கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது!

குழந்தைகளின் உடற்பயிற்சியையும், அவர்களின் ஆரோக்கிய மேன்மையையும் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதே இந்தக் கவலையைப் போக்க சிறந்த வழி. ஆம் பெற்றோரே… உங்களால் மட்டுமே இது சாத்தியமாகும்! உங்கள் குழந்தைகளோடு தினமும் சிறுசிறு உடற்பயிற்சிகளை அவர்களோடு சேர்ந்து செய்து வந்தால், குழந்தைகளின் மகிழ்ச்சி பன்மடங்காகும்… உடலும் அழகாகும்… ஆரோக்கியமும் சிறக்கும். அவர்களின் அன்பு, மரியாதையும் இரட்டிப்பாகி, குடும்ப பந்தத்தையும் உறுதியாக்கும். இதற்காக உடற்பயிற்சி மையத்துக்குச் செல்லவோ, விலைமதிப்புள்ள உடற்பயிற்சி சாதனங்களை வாங்க வேண்டியஅவசியமோ இல்லை.

பெற்றோர் காலையில் வாக்கிங் போகும் போது குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம். வீட்டில் நாய் வளர்க்கும் பட்சத்தில், அதை வாக்கிங் அழைத்து வருவதை குழந்தைகளின் பொறுப்பாக ஒப்படைக்கலாம். வீட்டுத் தோட்ட வேலைகளைச் செய்யும் போது, தண்ணீர் எடுத்து வருவது, இலைகளைக் கூட்டிப் பெருக்குவது என அவர்கள் பங்குக்கு ஏதாவது வேலை செய்யச் சொல்ல வேண்டும்.

மனதுக்கு இனிய இசையோடு நீங்கள் ஏரோபிக்ஸ் செய்யும்போது, வீட்டின் ஒரு சுவரில் ஒரு பெரிய கண்ணாடிப் பொருத்தி, அந்தக் கண்ணாடியில் உங்களைப் பார்த்து, ஏரோபிக்ஸின் அங்க அசைவுகளை தினமும் 20-30 நிமிடங்கள் செய்யச் சொல்லி பழக்குங்கள். வீடு சுத்தம் செய்யும் போதோ, காரை கழுவும் போதோ, வாஷிங் மெஷினில் துவைக்கும் போதோ, சமையல் செய்யும் நேரத்திலோ, குழந்தைகளின் பளுவுக்கேற்ப சிறுசிறு பொறுப்பான வேலைகளை செய்யச் சொல்லலாம். அதன் மூலமாக சில பல உடற் பயிற்சிகளை, அவர்களே அவர்கள் அறியாத வண்ணம் செய்து, ஆரோக்கியம் அடைந்து, அழகிய உடலையும் பெறுவார்கள்.

இப்படி அனைத்து வேலைகளோடு, உங்கள் கூடவே குழந்தைகள் உடற்பயிற்சி செய்வதால், அவர்களின் சந்தோஷம் கூடுகிறது. டி.வி. பார்ப்பது குறையும். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது, மொபைல் போனில் விளையாடுவது, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், சாட்டிங் என அனைத்தும் அவர்களுக்குத் தேவையற்றதாகி விடும். பள்ளிப் படிப்போடு, பெற்றோரோடு சேர்ந்து சிறிய உடற்பயிற்சிகள் செய்வதால், உடல் முழுமையான வளர்ச்சி பெறுகிறது… உறுதியாகிறது.

மனவலிமை அதிகரிக்கிறது. உள்ளத்தில் தெளிவு உண்டாகிறது. அனைத்தையும் பெற்றோரோடு சேர்ந்து செய்வதால், ‘நம்மாலும் அம்மா, அப்பா போல சிறப்பாக எதையும் செய்ய முடியும்’ என்ற தன்னம்பிக்கை வளர்கிறது. இதன் காரணமாக படிப்பிலும் குழந்தைகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, நல்ல முயற்சியால் சிறந்த மதிப்பெண்கள் பெறுகின்றனர்.

எப்போது தொடங்க வேண்டும்?

குழந்தைகள் நன்றாக நடக்க ஆரம்பித்து விட்ட உடனேயே உடற்பயிற்சிகளை அவர்களோடு சேர்ந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். அவர்களுக்கு 4&5 வயது ஆகும் போது சிறியதாக ஏரோபிக்ஸ், டான்ஸ், நீந்துதல் என உங்கள் கூடவே செய்ய பழக்க வேண்டும். வெகு சிறிய வயதிலேயே இப்படித் தொடங்குவதால், அவர்கள் இளைஞர்கள் ஆகும் போதும், அதன் பிறகும் அனைத்து நிலைகளிலும் உடற்பயிற்சியை தொடர்வார்கள். ஆரம்பம் சற்று கடினமாகத்தான் இருக்கும். தினமும் விடாமல் கடைப்பிடித்தால், அதுவே தினசரி வாழ்க்கையின் அங்கமாகி விடும். வீட்டை விட்டு வெளியே சென்று குழந்தைகளோடு உடற்பயிற்சியை முதலில் 10 நிமிடங்கள் தொடங்கி, பின்பு அதை மெதுவாக 20&30 நிமிடங்களாக கூட்டி, வார விடுமுறை தினத்தில் ஒரு மணி நேரமாக மாற்றுங்கள்.

அளவுக்கு அதிகமாகக் கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு எரிச்சல் ஏற்படுத்தக்கூடாது. குழந்தைகளே விரும்பிச் செய்வது மிகவும் முக்கியம். குழந்தைகளின் ஆர்வம் அதிகரிக்கும் நேரத்தில் சிறிய உடற்பயிற்சி சாதனங்களாக Medicine Balls, Skipping Ropes, Dumb Bells, Resistance Band போன்றவற்றை உபயோகிக்கலாம். வார இறுதியில் குழந்தைகளோடு நீண்ட சைக்கிள் சவாரி செய்யலாம். குழந்தைகளின் நண்பர்களையும், அவர்களின் பெற்றோரையும் அழைத்து ஹைக்கிங் மற்றும் ட்ரெக்கிங் செல்லலாம். இரவு சாப்பிடுவதற்கு முன்போ, பின்போ, ஒரு குட்டி நடை சென்று வரலாம். நீச்சல், டென்னிஸ் பயிற்சிப் பாடங்களை சேர்ந்தே செய்யலாம்.

ஷாப்பிங் செல்லும்போது லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் பயன்படுத்தாமல் படிக்கட்டு களை பயன்படுத்த அறிவுரை செய்ய வேண்டும். அருகிலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு வாரம் இருமுறையாவது குழந்தைகளை கூட்டிச் செல்லுங்கள். இவை அனைத்தையும் செவ்வன செய்யும் பெற்றோருக்கு ஒரு சிறிய வேண்டுகோள்… make the activity fun and task based!

Leave a Reply