இருமலுக்குச் சித்தரத்தை

p58b

‘இது குளிர்ச்சி, இது சூடு, இது வாய்வு, இது நீர்’ என்ற உணவு பற்றிய புரிதல் இருந்த நிலம் இது. சமீபகாலமாக, ஹை கலோரி, லோ ஃபைபர் என்ற நவீனத்துக்குப் பலியாகிவிட்டது. முந்தைய புரிதல் இருந்தமட்டில், ‘இருமலுக்குச் சித்தரத்தை இதயத்துக்குச் செம்பரத்தை… சுக்குக்கு மிஞ்சிய மருந்துண்டா, சுப்பிரமணிக்கு மிஞ்சிய சாமியுண்டா’ என்ற சொலவடைகளில் சுகமாய் கைவைத்தியங்கள் ஒட்டியிருந்தன.

இருமலுக்குச் சித்தரத்தை என்பதுதான் நாம் முகரப்போகும் சித்தர் ஹைக்கூ. ‘தொண்டையில் கட்டும் கபத்தைத் துரத்தும் பண்டைச் சீதத்தைப் பராக்கடிக்கும் கெண்டை  விழிப் பெண்ணே!’- என அகத்திய குணவாகடத்தில் அழகுப் பெண்ணுக்கு ஆரோக்கியக் குறிப்பாக, அரத்தையைக் காட்டிப் பாடியுள்ளார் சித்தர். இஞ்சிக் குடும்பத்துப் பெண்தான் சித்தரத்தை. இந்தியாவில் இஞ்சியைக் கொண்டாடுவது போல, தாய்லாந்தும், இந்தோனேசியாவும், வியட்நாமும் அரத்தை இல்லாமல் அம்மிப் பக்கம் போவது இல்லை.

சிற்றரத்தை, பேரரத்தை என அரத்தையில் இரண்டு ரகங்கள் உண்டு. இரண்டும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாலும்,  சித்தரத்தைக்கு மருத்துவச் சிறப்பு கொஞ்சம் ஒசத்தி. கால் டீஸ்பூன் அளவு அரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிகொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும். மேலும், சளிக்குக் காரணமான சால்மொனல்லா, ஸ்ட்ரெப்டோ காக்கக்ஸ் எனப் பல்வேறு நுண்ணுயிரிகளின் கொட்டத்தை அடக்கும் எதிர் நுண்ணுயிரி ஆற்றலும் (Anti-biotic activity) கொண்டது என, இன்றைய நவீன அறிவியலும் அங்கீகரித்து உள்ளது. அரத்தையை, சிறுசிறு துண்டுகளாக்கி, அதில் நான்கைந்து துண்டுகளை, இரண்டு டம்ளர் நீர் விட்டு, மூன்று நான்கு மணி நேரம் ஊறவைத்து, அந்த ஊறல் கஷாயத்தைச் சாப்பிட்டாலும் இருமல் போகும். ‘தாய்’ உணவகங்களில் இந்தக் கஷாயம் பிரசித்தி.

சின்னதாய் இரண்டு துண்டு அரத்தையை வாயில் அடக்கிக்கொண்டால், பேச்சுக்கிடையே வரும் இருமல் பேசாமல் அடங்கிவிடும். வறட்டு இருமல், சூட்டு இருமலுக்கு, அரத்தைத் துண்டுடன், பனங்கற்கண்டையும் சேர்த்து, வாயில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

வயோதிகத்தில் வரும் மூட்டுவலிக்கும் ருமட்டாய்டு மூட்டுவலிக்கும், அரத்தையும் அமுக்கராங்கிழங்கையும் நன்றாக உலர்த்தி, பொடித்துவைத்துக்கொண்டு, கால் டீஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து, காலை, மாலை உணவுக்கு முன்பு, 45 நாட்கள் எடுக்க வேண்டும்.  சிறந்த வலிநிவாரணியாகவும் அழற்சியைப் போக்கி நோயின் தீவிரத்தைக் குறைக்கவும், இந்தப் பொடி உதவும். புற்றுநோய்க்கு, அறுவைசிகிச்சை எடுத்துக் கொண்டாலும், இந்தப் பொடியை, செயல்படு உணவாக (Functional food) எடுப்பது கூடுதல் பயனை அளிக்கும்.

சிற்றரத்தை, அதிமதுரம், தாளீசம், திப்பிலி  இவற்றைச் சமபங்கு எடுத்து, வறுத்துப் பொடித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் இதன் திறன் குறையாது. அரத்தையின் மருத்துவச் செயலுக்கு, அதன் மாறாத மணம் முக்கியம். அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு, இரைப்பிருமல் எனும் ஆஸ்துமாவால் அவதிப்படுவோருக்கு, இந்தப் பொடியைக் கால் டீஸ்பூன் எடுத்துத் தேனில் குழைத்து, காலையில் உணவுக்கு முன் கொடுத்துவரலாம்.

நம் ஊர் நாட்டு மருந்துக்கடையில் அரத்தை மாதிரி பல அற்புதங்கள், அழுக்குக் கோணியில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அயல் நாட்டவரோ, அதைப் பிரித்து மேய்ந்து, காப்புரிமையில் கட்டி வைத்திருக்கின்றனர். கரண்டியோடு நம் கையை அவர்கள் பிடிக்கும் முன்னராவது, நம் பாட்டன் வீட்டுச்சொத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பாய் இருப்போம்!

அரத்தையும் – ஆய்வுகளும்!

மலையேற்றம், வாகனத்தில் பயணிக்கையில் வரும் வாந்திக்கு, அரத்தையை வாயில் அடக்கிக் கொள்ளலாம் என, அதனை ஆய்ந்துவரும் ஜப்பானியர்கள் ஆய்வறிக்கை தந்துள்ளனர்.  மூட்டுவலிக்குக் குறிப்பாக, நோய் எதிர்ப்பு ஆற்றல் சீர்கேட்டால் வரும், ருமட்டாய்டு மூட்டுவலிக்கு அரத்தைப் பொடி, நெடுநாள் பயன் தரும் என்கின்றன நவீன ஆய்வுகள். மூட்டுகளுக்கு இடையே உள்ள அழற்சியைப் போக்கும் தன்மையை, அரத்தையில் உள்ள தாவர நுண்கூறுகள் கொண்டிருப்பதை, ஆய்ந்தறிந்து சொல்கின்றார்கள் நம் ஊர் விஞ்ஞானிகள். தேரன் சித்தரோ, அரத்தையினால் சுவாசம், மூலம், சோபை, வாத சுரோணித நோய் எல்லாம் போகும் என பட்டியலிட்டுள்ளார்.  கேலங்கின், குய்ர்செட்டின், கேம்ப்ஃபெரால் எனும் மூன்று முக்கிய சத்துக்கள் கொண்ட அரத்தை, கொழுப்பைக் குறைக்கும் என்கிறார்கள் கொரிய விஞ்ஞானிகள். அரத்தையினுள் இருக்கும் கேலங்கின் சத்து, நுரையீரல் புற்றில், அதன் வேகமான வளர்ச்சியைத் தடுக்கும் உணவாய், மருந்தாய் உதவும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. சமையலில் சித்தரத்தை சட்னி, சூப் என வெளுத்துவாங்கும் சீனரும் கொரியரும் அரத்தையில் நடத்திய ஆய்வுகள் ஏராளம்.  உணவாக இதைச் சேர்ப்பதால், புற்றுநோயின் தாக்கத்தையும் குறைக்கலாம் என்கின்றன இப்போதைய ஆய்வுகள்.

Leave a Reply