மனித உடலில் எத்தனை விதமான கொழுப்புகள் உள்ளன?
மனித உடலில் ஐந்து வகையான கொழுப்புகள் உள்ளன. உள்ளுறுப்புக் கொழுப்பு உடலுறுப்புகளைச் சுற்றி இருப்பது. வெள்ளைக் கொழுப்பு ஆற்றலைச் சேமித்து வைக்கக் கூடியது. பழுப்புக் கொழுப்பு கலோரிகளை எரிக்க உதவுகிறது. தோல் அடிக் கொழுப்பு, தோலுக்கு அடியில் இருக்கக்கூடியது. தோல் அடிக் கொழுப்பும் உள்ளுறுப்புக் கொழுப்பும் சேர்ந்த கலவையே வயிற்றுக் கொழுப்பு.
எண்ணெயில் பொரித்த உணவைச் சாப்பிடுவதால் இதயக் கோளாறு ஏற்படுமா?
உணவு எப்படி பொரிக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆலிவ், சூரியகாந்தி எண்ணெயில் பொரிக்கப்படும் உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இவர்கள், பொரித்த உணவு வகைகளை தவிர்ப்பவர்களுக்குச் சமமான இதய ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள்.
ஒருவர் உடற்பருமன் உள்ளவராக மாறுகிறார் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?
ஆண்களைப் பொறுத்தவரை 37 முதல் 40 அங்குலம் இடுப்பளவு இருந்தால் அதிக உடல் எடை என்று கொள்ளலாம். 40 அங்குலத்தை தாண்டிவிட்டால் பருமன் என்று சொல்லலாம். பெண்களைப் பொறுத்தவரை இடுப்பளவு 31.5 முதல் 34.6 அங்குலம் இருந்தால் அதிக உடல் எடை. இடுப்பளவு 34.6-யைத் தாண்டிவிட்டால் பருமன் என்று கொள்ளலாம்.