டெல்லியில் கிறிஸ்துவ பள்ளி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார்? பெரும் பரபரப்பு
பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது முதல் கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆங்காங்கே தாக்கப்படுவது குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் உலக அளவில் கண்டனத்தை பெற்றுள்ள நிலையில் நேற்று டெல்லியில் கிறிஸ்து பள்ளி ஒன்றின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தலைநகர் டெல்லியில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள வசந்தவிஹார் என்ற பகுதியில் இயங்கி வரும் ஹோலி ஆக்ஸிலியம் பள்ளியில் நேற்று அதிகாலை நுழைந்த சில மர்ம நபர்கள் பள்ளி முதல்வரின் அறையை பயங்கர ஆயுதங்களால் அடித்து நொறுக்கியுள்ளனர்.
பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவுடன் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்த மர்ம நபர்கள் பின்னர் பள்ளியின் முக்கிய கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை, டெல்லி கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார் சவரிமுத்து சங்கர் உறுதி செய்துள்ளார். இந்த தாக்குதல் காரணமாக பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சம்பவம் குறித்த தகவலறிந்தவுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் பள்ளி வளாகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்துள்ளனர். மர்ம நபர்கள் சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்குமுன்னர் பதிவான காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்” என்றார். இந்த பள்ளியின் தாக்குதலுக்கு இன்று முதல்வராக பதவியேற்கவிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.