3 ஆண்டுகளுக்கு பிறகு சீமானை வறுத்தெடுக்கும் கிறிஸ்துவர்கள்
கடந்த 2013ஆம் ஆண்டு பிரபல திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான், கிறிஸ்தவ மதம் குறித்தும், கிறிஸ்துவர்களின் புனித நூலான புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சு ஒன்று சமீபத்தில் ‘வாட்ஸ் அப்’பில் மிக வேகமாக பரவி வருகிறது. 3ஆண்டுகளுக்கு முன் பேசிய இந்த பேச்சு தற்போது கிறிஸ்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமானின் இந்த பேச்சுக்கு ராமேஸ்வரம் பகுதியில் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்ததோடு சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சீமான் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவருடைய உருவப்பொம்மையை எரிக்க போவதாகவும் அறிவித்து உள்ளனர்.
சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள போஸ்டரில் அப்படி என்னதான் இருக்கின்றது? இதோ அந்த போஸ்டர்
”பணந்தின்னி சீமானே மன்னிப்பு கேள்…
கிறிஸ்தவ மக்களின் புனித நூலான பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடுகளை கேவலப்படுத்தியும், கிறிஸ்தவத்தின் அடிப்படை புனித ஆத்மார்த்த தத்துவமான ‘திவ்ய நற்கருணை’ உட்கொள்வதை ‘பணந்தின்னி கிறிஸ்தவர்கள்’ என இழிவுபடுத்தி பேசிவரும் தமிழ் உணர்வுகளை பணத்திற்காக அடகு வைக்கும் போலித்தமிழன் பகல் குடிகாரன் சீமானை காவல்துறையே.. தமிழக அரசே… கைது செய்” இதுதான் அந்த போஸ்டரில் உள்ள வாசகங்கள்
இது குறித்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் நிர்வாகி போஸ்கோ செய்தியாளர்களிடம் கூறியபோது, “‘கிறிஸ்தவ மதம் குறித்து விமர்சனம் செய்துள்ள சீமானின் செயல் மன்னிக்க முடியாதது. 3 ஆண்டுகளுக்கு முன்பே சீமான் இப்படி பேசி இருந்தாலும், அது இப்போதுதான் வெளியாகி உள்ளது. கிறிஸ்தவ மதத்தினரை அவமதிக்கும் சீமானின் இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்.
இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அப்படி பெறவில்லை என்றால், நாங்கள் அடுத்தக்கட்டமாக சீமான் உருவப்பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோம்” என்று கூறினார்.