முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபா தலைவர் மதன்மோகன் மல்வியா ஆகியோரின் பிறந்த நாளை ‘‘சிறந்த ஆளுமை’’ தினமாக கொண்டாட மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மத்திய அரசின் நவோதயா, கேந்த்ர வித்யாலயா பள்ளிகளில் டிசம்பர் 25ஆம் தேதி அன்று 1 முதல் 5–ம் வகுப்பு, 6 முதல் 8–ம் வகுப்பு, 9 முதல் 10–ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டுரைப்போட்டி, வினா – விடை போட்டி, குறும்படங்கள் திரையிட்டு மாணவர்களுக்கு ஆளுமை தினம், பண்டிகளை பற்றி விளக்கி கூற வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் இந்த விழா கொண்டாடப்படுவதால் கிறிஸ்துவ மாணவர்களின் விடுமுறை ரத்து ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது குறித்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று பள்ளி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் சிறந்த ஆளுமை தினம் கொண்டாட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரையாண்டு தேர்வு 23–ந் தேதி முடிவடைகிறது. 24–ந் தேதி முதல் ஜனவரி 1–ந் தேதி வரை அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 2–ந் தேதி தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ‘இந்த தகவல் முற்றிலும் தவறானது. இது போன்ற எந்த சுற்றறிக்கையும் அனுப்பப் படவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி என்னிடம் தெரிவித்தார். எந்த பள்ளிகளும் அன்று இயங்காது. ஆன்லைன் மூலமாக கட்டுரை போட்டிகள் மட்டுமே நடைபெறும். விருப்பமுள்ளவர்க்ள் மட்டும் இதில் பங்கேற்கலாம். அவ்வளவுதான்” என்று தெரிவித்தார்.