டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசு பள்ளிகளுக்கு வழக்கம்போல் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கமளித்துள்ளார்.
சில ஊடகங்களில் திட்டமிட்டே மக்களை திசை திருப்பும் வகையில், செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் சாடியுள்ளார்.
டிசம்பர் 25-ம் தேதியன்று நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் அன்றைய தினம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கட்டுரைப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாது எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இச்செய்தி தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்துள்ள ஸ்மிருதி இராணி, டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசு பள்ளிகளுக்கு வழக்கம்போல் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது விளக்கமளித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “பரபரப்பான தலைப்புச் செய்தி வேண்டுமென்பதற்காக, தவறான செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தகவல் திரித்து செய்தியாக்கப்பட்டுள்ளதால் நான் விளக்கமளிக்கிறேன். டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகளில் நடைபெறவுள்ள கட்டுரைப் போட்டியில் பங்கேற்பது மாணவர்கள் விருப்பமே, யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. மேலும், இப்போட்டி ஆன்லைனில் நடத்தப்படவுள்ளது” என்றார்.
இது தவிர தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்மிருதி வெளியிட்டிருக்கும் தகவலில், “கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை. கட்டுரைப் போட்டி ஆன்லைனில் நடத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.