நெல்லை அருகே தேவாலய தேர்பவனியின் போது விபத்து., 4 பேர் பலி
நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் இன்று நடைபெற்ற தேவாலய தேர் பவனியின்போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உவரி கிராமத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில், கடந்த 9 நாட்களாக திருவிழா நடைபெற்று வந்தது. இன்றைய கடைசி நாளில் தேர்பவனி நடந்தது. அப்போது, அன்னை வேளாங்கண்ணி சொரூபத்தை சிறிய தேரில் வைத்து, அதனுடன் பக்தர்கள் ஊருக்குள் வலம் வந்தனர். இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பக்தர்கள் இழுத்து சென்ற தேர், சாலையில் சென்றபோது திடீரென தாழ்வாக இருந்த மின்சார வயரில் தட்டி இருக்கிறது. அப்போது மின்சாரம் பாய்ந்ததில், அங்கிருந்த பக்தர்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, அவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவாலய திருவிழாவின்போது ஏற்பட்ட இந்த சோகச் சம்பவத்தால், உவரி மட்டும் அல்லாமல் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.