பீடி/சிகரெட்டில் உள்ள நிகோடின் குழந்தைகளுக்கு எமன்..!

o-SMOKING-facebook-350x250

புகைப்பிடிப்பவர்கள் எல்லோருமே சமூகத்தின் மீதான பொறுப்புணர்வு இல்லாதவர்கள். ஏனென்றால் இதன் காரணமாக பாதிக்கப்படப்போவது தனிநபர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமும்தான். வீட்டுக்குள்ளே மனைவி மற்றும் குழந்தைகள் முன் புகைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களது குழந்தைகளையே கடைக்கு அனுப்பி பீடி/சிகரெட் வாங்கிவரச் சொல்வார்கள். இது இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

முதலாவது, 4 ஆயிரம் விதமான நச்சுப் பொருட்களை உள்ளடக்கிய சிகரெட்டை புகைத்து வெளியே விடும்போது அதனுள் இருக்கும் நச்சு அருகில் இருப்பவரையும் தாக்குகிறது. இரண்டாவது குழந்தைகள் முன் புகைக்கும்போது இதைப் பார்த்து பிற்காலத்தில் அவர்களும் புகைப்பழக்கத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் புகையிலை கட்டுப்பாட்டு வள மையத்தின் பேராசிரியர் விதுபாலாவிடம் பேசினோம்…

‘‘புகைப்பிடித்தலின் பாதிப்புகளை நாம் நேரடிப் புகை, சாத்வீகப் புகை அல்லது இரண்டாம் தரப் புகை, மூன்றாம் தரப் புகை அல்லது சுற்றுச்சூழல் புகை என மூன்று வகையாகப் பிரிக்கலாம். நேரடிப் புகை என்பது புகைப்பவருக்கு ஏற்படும் பாதிப்பு, இரண்டாம் தரப் புகை என்பது புகைக்கும்போது அருகிலிருப்பவர்களுக்கும் ஏற்படும் பாதிப்பு, மூன்றாம் தரப் புகை என்பது காற்றில் கலக்கும் நுண்துகள்களால் தொடர்பே இல்லாதவர்களுக்கும் ஏற்படும் பாதிப்பு.

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடுதான் பீடி/சிகரெட்டிலும் இருக்கிறது. தவிர நாப்தலின், அமோனியா, நெயில் பாலீஷ் ரிமூவர், ஹெக்ஸாமின் போன்ற 200க்கும் மேற்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுகள் இருக்கின்றன. குழந்தைப் பேறையே கேள்விக்குள்ளாக்குகிறது புகையிலைப் பழக்கம். புகைப் பிடிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு, விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவது, அதன் நகர்வுத் திறன் குறைவு ஆகியவை ஏற்படுகிறது. விந்தணுக்கள் நகர்வுத் திறன் குறையும்போது கருமுட்டையுடன் இணைந்து கருத்தரிக்க முடியாமல் போகும்.

பெண்கள் புகைப்பிடிக்கும்போது அவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது.இவற்றையெல்லாம் கடந்து கருத்தரித்தாலும் குழந்தை முறையாகப் பிறந்து வளர்வது வரை பல பிரச்னைகள் இருக்கின்றன. அமெரிக்காவில் புகைப்பிடிக்கும் கர்ப்பிணிப் பெண்களை சோதித்ததில் குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சியை தாமதப்படுத்துவதையும் மற்றும் குறைபாட்டை ஏற்படுத்துவதையும் கண்டறிந்துள்ளனர். உச்சபட்சமாக கருச்சிதைவும் ஏற்படலாம்.

கர்ப்பிணிகள் புகைப்பிடித்தால் மட்டுமல்ல, அவர்களின் அருகில் யாரேனும் புகைப்பிடித்தாலும் இப்பிரச்னைக்கு ஆளாக நேரிடும். சிகரெட் புகையில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடை சுவாசிக்கும்போது குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது. குழந்தை எடை குறைவாகப் பிறக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். பீடி/சிகரெட்டில் உள்ள நுண் துகள்கள் (Particulate matter), வாகனப் புகையிலிருந்து வெளியாகும் நுண் துகள்களைக் காட்டிலும் 200 மடங்கு வீரியம் மிக்கவை. பச்சிளம் குழந்தையின் முன் புகைப் பிடிக்கும்போது Sudden infant death syndrome எனும் திடீர் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றி வளர்வார்கள்.

பீடி/சிகரெட்டில் உள்ள நிகோடின் எனும் பொருள்தான் மூளையை அடிமைப்படுத்துகிறது. 60 மி.கி.நிகோடினை ஒரே நேரத்தில் உட்கொண்டால் ஆரோக்யமானவர்களின் உயிரையும் கூட பறித்து விடும். நேரடிப் புகையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிகராக இரண்டாம் தரப் புகையினால் பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலின் பல்வேறு பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலை முக்கியக் காரணமாக இருக்கிறது. வீடுகளில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் முன் புகைப் பிடித்தால் இரண்டாம் தரப் புகையினால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்படும்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, புகையிலை கட்டுபாட்டு வளமையம் சார்பில் 15 ஆயிரத்து 186 பள்ளி மாணவர்களிடம் சர்வே ஒன்றை எடுத்தோம். அதில் 40 சதவிகித மாணவர்கள் வீட்டில் தந்தையோ, உறவினரோ புகைப்பதால் இரண்டாம் தரப் புகைக்கு ஆளாகிறார்கள் என்று தெரிவித்தனர். 85.4 சதவிகித குழந்தைகள் தங்களது பள்ளியிலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக தெரிவித்தனர்.

பொது இடங்களில் புகைப் பிடிப்பது சட்டப்படி குற்றம் (COTPA பிரிவு 4), 18 வயதுக்குட்பட்டவர்கள் புகையிலைப் பொருட்களை வாங்கவோ, விற்கவோ கூடாது (COTPA பிரிவு 6A) பெற்றோர், உறவினர், நண்பர்களுக்கு வாங்கிக் கொடுப்பதும் குற்றமாகும். கல்வி நிறுவனங்களைச் சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்குள் புகையிலைப் பொருட்கள் விற்பது குற்றம் (COTPA பிரிவு 6B) ஆகிய சட்டங்கள் இருந்தாலும் இவையெல்லாம் முறைப்படுத்தப்படவில்லை.

18 வயதுக்குட்பட்ட எல்லோருமே குழந்தைகள்தான் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. அப்படிப் பார்க்கும் போது இன்றைக்கு பல குழந்தைகள் புகையிலைப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்கக் கூடாது என்கிற சட்டத்தை சரியாக நடைமுறைப் படுத்தினால் இதன் சீர்கேட்டிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றலாம்.

புகையிலை பழக்கத்திலிருந்து வெளியே வர நினைப்பவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் மருந்துகளை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாகத் தரப்படுகிறது. புகைப் பிடிப்பவர்கள் பாதிப்பதை விட புகைப்பழக்கம் இல்லாதவர்களை இந்த பாதிப்பிலிருந்து மீட்க வேண்டும். தான் ஊதுகிற புகையிலிருந்து வெளியாகும் நச்சு தனது சந்ததியையே சீர்குலைத்து விடும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்’’ என்கிறார் விதுபாலா. பீடி/ சிகரெட் இவையெல்லாம் புகைப்பிடிப்போருக்கு மட்டும் எமனல்ல… ஏதும் அறியாத குழந்தைகளுக்கும் கூட.

Leave a Reply