சிகரெட், பீடி, குட்கா ஆகிய போதை பொருட்களினால் இதை உபயோகிப்பவர்கள் மட்டுமின்றி அருகில் இருப்பவர்களுக்கும் பெரும் தீங்கு ஏற்படுகிறது. இதனால் கேன்சர் முதல் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பொதுமக்களிடையே சிகரெட் பயன்படுத்தும் பழக்கத்தை குறைக்கும் வகையில் சிகரெட்டுக்கு வரியை கடுமையான அளவில் உயர்த்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி சிகரெட் ஒன்றுக்கு ரூ.3.50 வரை விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இம்மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் வரும் என கூறப்படுகிறது. இதனால் சிகரெட் விலை இருமடங்கு உயர வாய்ப்பு உள்ளது. சிகரெட் விலை கடுமையாக உயரலாம் என்ற காரணத்தால் இப்பொழுதே மொத்த வியாபாரிகள் சிகரெட்டுக்களை பதுக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து நேற்று டெல்லியில் சுகாராத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அளித்த பேட்டியில் “புகையிலைப் பொருட்கள் என்பது சிகரெட், பீடி, குட்கா ஆகியவைதான். இவற்றால்தான் நோய்கள் அதிகமாக ஏற்படுகிறது. இவற்றின் விலையை மிக அதிகமாக்கிவிட்டால் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிடும். இதனாலேயே இவற்றின் விலையை மிக அதிகபட்சமாக உயர்த்த வேண்டும்”: என்று கூறினார்.