சென்னை:விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகில் சியாமளா கார்டன் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
சினிமா டைரக்டர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இங்கு வசித்து வருகிறார்கள்.
கடந்த மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் 4 கார்களில் வந்த கும்பல் அங்கிருந்த காவலாளியை தாக்கிவிட்டு வன்முறையில் ஈடுபட்டது. அது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். அதில் எங்களது குடியிருப்பில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் சரியாக செயல்படாததால் அவர்களை மாற்றிவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். இதனால் ஆத்திரம் அடைந்த பழைய பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரையும் அவரது மகனையும் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இயக்குனர்கள் ஏ.ஆர். முருகதாசின் மனைவி ரம்யா, ரமேஷ் கண்ணாவின் மனைவி ஷோபா, பேரரசுவின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் அந்த குடியிருப்பில் வசித்து வரும் பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட 50 பேர் இன்று மதியம் வேப்பேரியில் உள்ள புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்டனர். தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் எனவே உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர்கள் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது, கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக எங்களது குடியிருப்பில் வசிக்கும் மாறன் என்பவரது வீட்டுக்கு சிலர் சமாதானம் பேச சென்றுள்ளனர். அப்போது சமாதானமாக செல்லலாம் என்று கூறி இருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குடியிருப்பு வாசிகள் தாக்கிவிட்டதாக பொய் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். மேலும் எங்கள் குடியிருப்பு முன்பு வந்து சிலர் கோஷம் எழுப்பி சென்றுள்ளனர். எனவே எந்த நேரத்தில் எது நடக்குமோ என்று எங்களுக்கு பயமாக உள்ளது. எனவே குடியிருப்புக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதுடன் நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கையும் போலீசார் ரத்து செய்ய வேண்டும். மேலும் எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வசித்து வருகிறார்கள். அப்படி இருந்தும் அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.