சென்னை ஐகோர்ட்டில் இன்று முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு.
சென்னை ஐகோர்ட்டில் இன்று முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளதால் கெடுபிடிகள் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்களுக்கு இன்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறும் என்று செய்திகள் வெளிவந்துள்ளதால் அதனை தடுக்க, தமிழக காவல்துறை சார்பிலும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அறையின் முன்பு வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆகியோர் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று போராட்டம் செய்தனர். இதனால், ஐகோர்ட்டின் பாதுகாப்பு குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இன்று முதல் சென்னை ஐகோர்ட்டின் பாதுகாப்பு பணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்று கருதப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் தினகரன் தலைமையில் சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.