ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அந்த மாநிலத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ்வர் நகரில் இருந்து சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கோராபுட் என்ற மாவட்டத்தில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவினர்களுக்காக உள்ள ஹாஸ்டலில் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 4ஆம் தேதி ஹாஸ்டலில் குழந்தை பெற்றுள்ளார். இந்த குழந்தைக்கு யார் காரணம் என்பது அந்த மாணவிக்கே தெரியவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்காமல் மறைத்து வைத்த அந்த மாணவி படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஹாஸ்டல் வார்டன் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த பகுதி காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
ஒடிசாவில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்ற அதிர்ச்சியில் இருந்தே அப்பகுதி மக்கள் மீளாத நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்ற விவகாரம் அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.