எகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ரா பாம்பு கடித்துத்தான் இறந்தார் என்று கூறப்படும் கதையை மான்செஸ்டர் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மறுத்துள்ளனர்.
பழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாகப் பாம்பு கடித்து அரசி இறப்பதற்கு எந்த அளவுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன என அந்தப் பல்கலைக்கழகத்தில் எகிப்து குறித்து ஆராயும் நிபுணர்களும் பாம்புகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் ஒன்றாக இணந்து ஆராய்ந்தனர்.
அரசியையும் அவரது இரண்டு தோழிகளையும் கொல்லக்கூடிய நாகத்தை அவ்வளவு சிறிய பெட்டிக்குள் மறைத்துக் கொண்டுவந்திருக்க முடியாது என அவர்கள் கருதுகின்றனர்.
தொடர்ச்சியாக மூன்று முறை நாகம் கடித்தது என்ற கதையின் நம்பகத்தன்மை குறித்தும் அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
எகிப்தின் அரசியாக இருந்த கிளியோபாட்ரா தன் 39வது வயதில் கி.மு. 30ல் இறந்துபோனார். அவர் அரசியாக இருந்தபது ரோம சாம்ராஜ்யத்துடன் தொடர்ந்து அவருக்கு மோதல்கள் இருந்துவந்தன.
ரோம் நாட்டுக் குறிப்புகளில்கூட விஷம் நிறைந்த பாம்பினால் கடிக்கப்பட்டே கிளியோபாட்ரா மரணமடந்தார் என்று கூறப்படுகிறது. அல்லது தற்கொலை செய்துகொள்வதற்காக பாம்பை அவர் கடிக்க விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
3 பேரை அடுத்தடுத்து பாம்பு கொத்துமா?
கிளியோபாட்ராவை கொத்தியதாகக் கூறப்படும் நாகப் பாம்பு மிகப் பெரிய அளவில்தான் இருந்திருக்க முடியும். அதை இந்தக் கதைகளில் வருவதுபோல பழக்கூடைகளில் மறைத்து கொண்டுவர முடியாது என மான்செஸ்டர் அருங்காட்சியகத்தின் காப்பாளரான ஆண்ட்ரூ க்ரேயும் எகிப்திய நிபுணரான ஜாய்ஸ் டில்டெஸ்லியும் கூறுகின்றனர்.
இம்மாதிரியான பாம்புகள் 5-6 அடி நீளம் கொண்டவையாக இருக்கும். 8 அடி அளவுக்குக்கூட இவை வளரக்கூடியவை. அவ்வளவு பெரிய பாம்பு கூடையில் மறைந்திருக்க முடியாது என்கிறார்கள் இவர்கள்.
அப்படியே கூடையில் வைத்து அந்தப் பாம்பு கிளியோபாட்ராவை சென்றடைந்திருந்தாலும் முதலில் கிளியோபாட்ராவையும் அடுத்தடுத்து அவரது இரண்டு பணிப்பெண்களையும் கொத்தியிருப்பது இயலாத காரியம் என்கிறார்கள் இந்த நிபுணர்கள்.
“நாகப்பாம்புகள் மிகப் பெரியவை என்பதோடு, அவை கடித்தால் மரணம் எற்படுவது வெறும் பத்து சதவீதம்தான். பெரும்பாலான தாக்குதல்களில் விஷம் வெளிப்படுவதில்லை. அப்படியே கொன்றாலும்கூட மரணம் மெதுவாகத்தான் நிகழும்” என்கிறார் க்ரே.
ஆனால், அடுத்தடுத்து இரண்டு மூன்று பேரைக் கொல்வது நடக்காத காரியம் என்கிறார் அவர்.
பாம்புகள் வேட்டையாடவும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவுமே விஷத்தைப் பயன்படுத்துகின்றன. ஆகவே அவை விஷத்தை சேமித்து வைத்துக்கொள்ளும் என்று சுட்டிக்காட்டுகிறார் க்ரே.