அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட உள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஹிலாரி கிளிண்டன் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முதல் தொடங்கிவிட்டார்.
நேற்று முதன்முதலாக ரூஸ்வெல்ட் என்ற தீவில் இருந்து தனது பிரச்சாரத்தை ஹிலாரி கிளிண்டன் தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது: ”வளமான வாழ்க்கை என்பது நிறுவனத்தின் செயல் அதிகாரிகளுக்கும், நிறுவன மேலாளர்களுக்கும் மட்டுமின்றி எல்லா அமெரிக்கர்களுக்கும் கிடைக்கச் செய்வேன்.
நான், இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் இறங்கியுள்ளேன். இந்த முறை என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நான் அதிபரானால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன். அமெரிக்க மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், நாட்டின் தேசிய பொருளாதாரத்தை நடுத்தர வர்க்கத்தினரும் அனுபவிக்கும் அளவுக்கு மாற்றியமைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
ஜனநாயகம் என்பது பண முதலைகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. நாட்டின் வளமான வளர்ச்சி, ஜனநாயகம் போன்ற அடிப்படைகளை மனிதன் அவசியம் கேட்டு பெறவேண்டும். அதற்கான பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. நீங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் நாடு வளர்ச்சி அடையும். அதனால், மக்களுக்கான வளமான வாழ்க்கையை அமைத்து கொடுப்பதுதான் என்னுடைய இலக்கு. அதற்காக தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
முதல்முறையாக ஒரு பெண் அதிபரை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிபர் தேர்தலில் நான் இளைய வயதினராக இல்லை என்றாலும், அமெரிக்காவின் புதிய பெண் அதிபராக சரித்திரத்தில் எனது பெயர் இடம் பெறும். பாட்டி ஒருவர் அதிபராக தேர்வானார் என்பது பெருமைக்குரியது தான்”