தமிழகத்துக்கு ஒரு பயனும் தராத கூடங்குளம் அணு உலைகளைமூட வேண்டும். உதயகுமாரன்

udhayakumaranதமிழக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லாத கூடங்குளம் அணு உலைகளை உடனடியாக மூட வேண்டும் என சுப.உதயகுமாரன் கூறியுள்ளார். அணுத் தீமையற்ற சமூகத்தை உருவாக்கும் வகையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில் நாடு முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்த பயணம் இன்று மூன்றாம் கட்ட மாக நாகர்கோவிலில் இருந்து தொடங்கியது.

மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக புறப்பட்ட இந்த பிரசாரக் குழுவினர் ரயில் பயணிகளிடம் அணுத்தீமை குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களை வழங்கினர். அத்துடன், ரயில் நிற்கக்கூடிய அனைத்து நிலையங்களிலும் இக்குழுவினர் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

இந்த பிரசார குழுவுக்கு நெல்லை ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப.உதயகுமாரன், ‘‘கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது. இந்திய அணு சக்தி கழகத் தலைவர் ரத்தன்குமார் சின்ஹா, கூடங்குளம் அணு உலையில் சில உதிரிப்பாகங்களில் பழுது ஏற்பட்டு இருப்பதால் அவற்றை மாற்றி வருவதாக கூறி உள்ளார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான சேகர்பாசு, கூடங்குளம் அணு மின் நிலையம் தரமானது அல்ல என்கிற ரீதியில் கருத்து தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, கூடங்குளம் அணு மின் நிலையம் சட்ட விரோதமானது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்து உள்ளது. கடந்த 7-ம் தேதி தீர்ப்பாயம் வெளியிட்ட அறிவிப்பில், கடற்கரை மேலாண்மை நியமங்களின் அனுமதி பெறாமல் கூடங்குளத்தின் இரண்டு அணு மின் நிலையங்களும் கட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. அதனால் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக மக்களுக்கு எதிரான வகையில் கட்டப்பட்டு உள்ள இரு அணு உலைகளையும் இழுத்து மூட வேண்டும்.

தமிழகத்தின் மின்தேவையை சமாளிப்பது பற்றி பேசிய முதலமைச்சர், தமிழகத்துக்கு மேட்டூர் நீர் மின்சக்தி, அனல் மின்சக்தி, தனியார் அனல் மின்சாரம் மற்றும் சூரிய சக்திகள் மூலம் மின்சக்தி கிடைப்பதாக தெரிவித்தாரே தவிர, கூடங்குளம் அணு மின்சக்தி பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

அதனால் தமிழகத்துக்கு எந்த பயனும் தராத இரு அணு உலைகளையும் உடனே மூட வேண்டும். எரிபொருளில் மூன்றில் ஒரு பங்காக கிடைக்கும் அணுக்கழிவுகளை எங்கே வைத்து இருக்கிறார்கள் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளும் இது பற்றி எதையும் கேட்க மறுக்கின்றன.

தமிழக மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணு உலைகளையும், நியூட்ரினோ, மீத்தேன் போன்ற அனைத்து திட்டங்களையும் தடை செய்ய வேண்டும்.

இதனை வலியுறுத்த வேண்டிய தமிழகத்தின் பெரிய கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் வாய் மூடி மௌனம் காக்கின்றன. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழும் உரிமையையும் பாதுகாக்காமல் இருக்கும் இந்த பெரிய கட்சிகளை எதிர்த்து வரும் சட்டமன்றத் தேர்தலின்போது வீதிவீதியாக சென்று மக்களிடம் பிரசாரம் செய்வோம்” என்று படபடத்தார்.

Leave a Reply