புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அதிகளவில் வரிச்சலுகைகளை வழங்கினால் அது அருகில் இருக்கும் மாநிலங்களை பாதிக்கும் என்றும் இதுபோன்ற சலுகை அறிவிப்புகளுக்கு முன்னர் முன்னெச்சரிக்கையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும் எனவும், அதனால் தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள விரிவான கடிதத்தில் தெரிவித்துள்ளார். முதல்வர் எழுதிய விரிவான கடிதத்தின் விவரம் வருமாறு:
ஆந்திரப் பிரதேச மறு சீரமைப்புச் சட்டம் 2014-க்கு உள்பட்டு, ஆந்திர மாநிலத்தை மறுசீரமைத்ததில், மறுசீரமைக்கப்பட்ட மாநிலங்கள் அல்லது இனி வரும் மாநிலங்களுக்குக் கிடைக்கக் கூடிய நிதி ஆதாரங்கள் தொடர்பான பரிந்துரைகளை, 14-ஆவது நிதி ஆணையத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. மறுசீரமைப்புச் சட்டமானது, பிரிக்கப்படும் மாநிலங்களுக்கு ஏராளமான நிதி, பொருளாதார பலன்கள் கிடைப்பதற்கு வகை செய்கிறது.
ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களின் மேம்பாட்டுக்காக அந்த மாநிலங்களுக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து அண்டை மாநிலம் என்ற அடிப்படையில், அது குறித்து நாங்கள் பொறாமை ஏதும் கொண்டிருக்கவில்லை. எனினும், 94-ஆவது பிரிவின் உள்பிரிவு 1-இல் இடம்பெற்றுள்ள அம்சங்கள், தமிழகத்துக்குக் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.
பிரிக்கப்படும் இரு மாநிலங்களின் தொழில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, அந்த மாநிலங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குவது உள்ளிட்ட தேவையான நிதி தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என 94-ஆவது பிரிவு உள்பிரிவு 1-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களிலும் தொழில்மயமாக்கல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு வரிச் சலுகைகள் வழங்குவதை இந்த சட்டவிதி உறுதி செய்கிறது. இந்தச் சட்டத்தில் எந்த மாதிரியான சலுகைகள் அளிக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. அதை மத்திய அரசின் வரையறை முடிவுக்கு விட்டுவிடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
பாதிப்புகளை ஏற்படுத்தும்: இந்தச் சூழ்நிலையில் தமிழகம் அண்டை மாநிலம் என்ற அடிப்படையில், தலையிட்டு சில அச்சங்கள், நிறுத்திவைக்க வேண்டிய விஷயங்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் பல்வேறு விதிவிலக்குகளுக்கு ஏற்றவாறு எளிமைப்படுத்தப்பட்ட பொதுவான வரி சீர்திருத்த நடைமுறைகள் இருப்பதை பிரதமர் அறிவார். மாநிலங்களுக்கிடையே ஒவ்வாத மறைமுக வரி விகிதங்கள், பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய போட்டி வரி விதிப்புகளை நீக்கும் முயற்சிகள் தொடர்ந்து தெரிந்தே நடைபெறுகின்றன.
இது, மாநில அளவில் ஏற்கெனவே இருந்த விற்பனை வரி முறையுடன் மதிப்புக்கூட்டு வரி முறையை அறிமுகப்படுத்துவதற்கு வழி வகுத்தது.
பல்வேறு விதி விலக்குகளை நீக்குதல், கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டு ஹிமாசலப் பிரதேசம், உத்தராஞ்சல் மாநிலங்களில் உள்ள சில புதிய தொழில் நிறுவனங்களுக்கு மத்திய கலால் வரி, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பகுதி அடிப்படையிலான சலுகைகள் வழக்கமான விதிகளைப் பின்பற்றாமல் வழங்கப்பட்டன.
இதுபோன்ற விதி விலக்குகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 2005-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். 2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், இந்த பிரச்னை தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட்டதை நினைவுபடுத்துகிறேன்.
ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கு பகுதி அடிப்படையிலான சலுகைகள் ஏதும் நீட்டிக்கப்படுமானால் அது, குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் இடம்பெயர்வதற்கும், அந்த மாநிலங்களில் மிக அதிக முதலீடுகளைச் செய்வதற்கும் வழி வகுக்கும். அண்டை மாநிலங்களை முற்றிலும் போட்டியிட முடியாத நிலைக்கு மாற்றி விடும். அண்டை மாநிலங்களில் ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகளுக்கும், புதிய தொழிற்சாலைகளுக்கும் அதுபோன்ற சலுகைகள் வழங்குவதால், அண்டை மாநிலங்கள் முற்றிலும் போட்டியிட முடியாத நிலை உருவாகும். இது அண்டை மாநிலங்களுக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்குவதுடன், அதைப் புறந்தள்ள முடியாத நிலையை ஏற்படுத்திவிடும்.
கவனமுடன் செயல்படுங்கள்: நாட்டில் பொதுச் சந்தையை ஊக்குவிக்கின்ற, லாபகரமான போட்டித் திறன், ஒப்பீடு ஆகியவற்றுக்கு வகை செய்யும் நியாயமான வரிக் கொள்கைக்கு எதிராக இத்தகைய வரிச் சலுகைகள் அமையும். வலுவான கட்டமைப்பு, பயிற்சி பெற்ற மனித ஆற்றல் கொண்ட மாநிலங்களில் இருந்து முதலீடுகளை, வேறு மாநிலங்களுக்கு வரிச் சலுகைகளுக்காக மாற்றுவதால், 20 ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கிய நியாயமான வரி கட்டமைப்பை நிலைகுலைய வைக்கும்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு முறை பதவி வகித்தபோது, பகுதி அடிப்படையிலான வரிவிலக்குகள் விவகாரத்தில், வெற்று வார்த்தை உறுதி மொழியினை அளித்தது.
எனவே, இந்த பிரச்னையை அணுகும்போது, பிரதமர் தலைமையிலான அரசு மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். தமிழகம் அல்லது அண்டை மாநிலங்களின் பொருளாதாரச் சலுகைகள் சீர்குலையும் வகையில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால், அது பகுதி அடிப்படையிலான வரிச் சலுகைகளுக்கு தவறான அறிவுறுத்தலாக அமைந்துவிடும். இந்த பிரச்னை தொடர்பான அனைத்து அம்சங்களையும் பிரதமர் நிச்சயம் ஆலோசிப்பார். இறுதி முடிவு எடுக்கும்போது தமிழகம் போன்ற அண்டை மாநிலங்களின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருக்கிறது.
2014-ஆம் ஆண்டைய ஆந்திரப்பிரதேச மாநில மறுசீரமைப்புச் சட்டத்தில் ஏற்கெனவே கணிசமான, குறிப்பிடத்தக்க பொருளாதாரச் சலுகைகள் இடம்பெற்றுள்ளன.
எனவே, இவ்விரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் என்ற பெயரில் பகுதி அடிப்படையிலான வரிச் சலுகைகள் என்ற சிக்கலான பிரச்னையை மிகவும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என உறுதிபடக் கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.