முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை எப்படி உள்ளது? 10 நாட்களுக்கு பின் அப்பல்லோ அறிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அட்மிட் ஆகி சரியாக இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாதத்தி அவ்வப்போது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டு வந்த அப்பல்லோ, கடந்த 10ஆம் தேதிக்கு பின்னர் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்நிலையில் பத்து நாட்களுக்கு பின்னர் அப்பல்லோ முதல்வர் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் டாக்டர் என்.சத்யபாமா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சுவாச ஆதரவு சிகிச்சை மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சை (“பாஸிவ் ஃபிஸியோதெரப்பி’) ஆகியவை தொடர்ந்து வழங்கப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த தீவிர சிகிச்சை குழுவில் உள்ள மூத்த இருதய சிகிச்சை நிபுணர்கள், சுவாசப் பிரச்னைகளுக்கான மூத்த நிபுணர்கள், நோய்த்தொற்று சிகிச்சைத் துறையைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள், நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் சர்க்கரை நோய் மூத்த நிபுணர்கள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து, அவரது உடல்நிலையைக் கவனித்து வருகின்றனர்.
உணவு நிபுணர்கள் மூலம்…முதல்வருக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்து மற்றும் அவர் உட்கொள்ளும் அத்யாவசிய ஊட்டச்சத்துக்களையும் உணவு ஆலோசனை குழுவில் உள்ள நிபுணர்கள் நேரடியாகக் கவனித்து வருகின்றனர். தற்போது முதல்வர் ஜெயலலிதா உரையாடி வருகிறார். அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.