ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன். சென்னை திரும்பிய முதல்வர் ஓபிஎஸ் பேட்டி
ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற டெல்லி சென்ற முதல்வர் தமிழக அரசே அவசர சட்டம் இயற்ற ஏற்பாடு செய்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். வெளியூர் சென்றிருக்கும் ஜனாதிபதி இன்று இரவு திரும்பியவுடன் தமிழக அரசின் அவசர சட்டத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதல்வர் ஓபிஎஸ் அவர்களிடம் செய்தியாளர்கள், ‘அவசர சட்டம் இயற்றியவுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நீங்கள் தொடங்கி வைப்பீர்களா’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர், ‘உங்கள் விருப்பப்படியே அது நடக்கும்” என்றார் மகிழ்ச்சியுடன்.
அவசர சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால்… என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நம்பிக்கை அடிப்படையில் செய்கிறோம். அதுபோன்ற தடை வராது’ என்றார் முதல்வர்.
பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், எந்த தடை வந்தாலும் அதை சட்டத்தின் மூலம் தமிழக அரசு நீக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.