மீனவர்கள் விடுதலையை அரசியலாக்க வேண்டாம். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

fishermen 5மீனவர்கள் விடுதலையை, பாரதிய ஜனதா உள்பட தமிழகத்திலுள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனை அளிக்கின்றது  என்று முதல்மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “போதைப் பொருள் கடத்தியதாக புனையப்பட்ட வழக்கில் 5 அப்பாவி தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் 30.10.2014 அன்று தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக 5 அப்பாவி தமிழக மீனவர்களின் உயிரினை காக்கவும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்ப உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் மத்திய அரசினை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் உரிய மேல் முறையீடு செய்திட இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தினை பணிக்கவும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதன் விளைவாக இலங்கை உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவ்வழக்கினை நடத்திட கொழும்புவிலுள்ள இந்திய தூதரகம் வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவினை இறுதி செய்தது. இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குச் செலவுக்காக 20 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கியது.

புரட்சித் தலைவி அம்மா மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட இடைவிடா தொடர் முயற்சிகளின் காரணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின்படி 5 மீனவர்களும் இலங்கை அரசால் 19.11.2014 அன்று விடுவிக்கப்பட்டு 20.11.2014 அன்று தாயகம் திரும்பியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் நேற்று நள்ளிரவில் சென்னை விமான நிலையம் வந்தந்தடைந்த போது அமைச்சர்கள் வரவேற்றனர். மேலும் அப்போது இந்த 5 மீனவர்கள் தங்கள் வாழ்க்கையை புதிதாக தொடங்குவதற்கு ஏதுவாக, ஒவ்வொருவருக்கும் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக அரசின் சார்பில் வழங்கினர். விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் அவர்களது சொந்த ஊருக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்களின் நலன் காப்பதில் எப்போதும் முன் நிற்பவர் புரட்சித்தலைவி அம்மா தான். மீனவர்கள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவது அஇஅதிமுக அரசு தான். இலங்கை அரசால் பொய் வழக்கு போடப்பட்ட உடனேயே, அந்தப் பொய் வழக்கினை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது புரட்சித்தலைவி அம்மா தான்.

இது பன்னாட்டுப் பிரச்னை என்ற காரணத்தால், இலங்கை அரசுடன் தமிழ்நாடு அரசு நேரடியாக எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள இயலாது. இலங்கை அரசுடன் மத்திய அரசும், வெளியுறவுத் துறையும் மட்டுமே தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும். தனது இந்தத் தார்மீகக் கடமையை மத்திய அரசு செயல்படுத்திட தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் புரட்சித்தலைவி அம்மாவும், தமிழ்நாடு அரசும் ஆகும். அதற்கேற்ப, மத்திய அரசு செயல்பட்டு, 5 தமிழ்நாடு மீனவர்களும் விடுதலை பெற்றது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

இந்த வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனை அளிக்கக்கூடியது. 5 மீனவர்களின் விடுதலைக்குத் தாங்கள் தான் காரணமென இங்கே உள்ள ஒரு சிலர் மார்தட்டிக் கொள்வது, தமிழ்நாட்டு மீனவர்களை கொச்சைப்படுத்துவது ஆகும். தங்களால்தான் இது நடைபெற்றது என்று இங்கே தமிழ்நாட்டில் கூறிக்கொள்ளும் ஒரு சிலர், கடந்த மூன்றாண்டுகளாக இது பற்றி என்ன நடவடிக்கை எடுத்தனர்? இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு உடனடியாக தாக்கல் செய்யப்பட 20 லட்சம் ரூபாய் அனுப்பும்படி இந்திய தூதரகம் கேட்ட போது, அந்தப் பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தது, மீனவர் நலனில் என்றும் அக்கறை செலுத்தும் அஇஅதிமுக அரசு தான். தமிழ்நாடு மீனவர்கள் நலன் காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply