நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ள நிலையில், சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாக சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி ஆஜராகுமாறு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா உட்பட 6 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பி இருந்தது.
காங்கிரஸ் வட்டாரத்தில் இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், “இந்த உத்தரவை அறிந்து வருத்தம் அடைந்தேன். எனினும், வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலையும் ஒரு அங்கம்தான். நேர்மையான விசாரணை நடக்கும்போது உண்மை வெளியில் வரும் என்று நம்புகிறேன். சட்டப்படி எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்.இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். உண்மை நிச்சயம் வெற்றி பெறும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு ஆதரவாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அக்கட்சித் தலைவர் சோனியா தலைமையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், குறிப்பாக மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, வீரப்ப மொய்லி உள்ளிட்ட ஏராளமானோர் இன்று சுமார் அரை கி.மீ தூரம் பேரணியாக சென்று, மன்மோகன் சிங்கின் வீட்டை அடைந்தனர்.
அங்கு அவரை நேரில் சந்தித்த சோனியா உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, “மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இந்தப் பேரணியை நடத்துகிறோம். எங்கள் தலைமைக்கு எதிரான இந்த வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொள்வோம். எங்கள் மீது குற்றமில்லை என்பதை நிலைநிறுத்துவோம்” என்றார்.