விழுப்புரத்தை அடுத்து கோவையிலும் கல்லூரி மாணவி தற்கொலை. கொலையா என சந்தேகம்?
சமீபத்தில் விழுப்புரம் அருகேயுள்ள ஒரு கல்லூரியில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பே இன்னும் முடியாத நிலையில் நேற்று கோவையில் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவி தனக்கு வாழப்பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வி.என்.கே. கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்த கோத்தகிரியைச் சேர்ந்த மாணவி திவ்யா, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர், கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மாணவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், மாணவி எழுதி வைத்திருந்தா கடிதம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த கடிதத்தில் “எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று எழுதப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால் மாணவியின் தலையில் காயம் உள்ளதாலும், வாய், மூக்கில் ரத்தம் வடிவதாலும் மாணவியில் இறப்பில் சந்தேகம் உள்ளதாக மாணவியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.