கோவையில் இன்று நடந்த மாநகராட்சிக் குழு கூட்டத்தில் திமுக – அதிமுக கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலில் திமுக பெண் கவுன்சிலர் தாக்கப்பட்டார்.
கோவை மாநகராட்சியின் 2014 -2015 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கூட்டம், இன்று மாநகராட்சி அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்திற்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்தார் திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகநாதன். கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், கடந்த ஆண்டு மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை எனப் பேசியதாகத் தெரிகிறது.
அப்போது ஒரு வெள்ளைத் தாளில் உலகிலேயே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பெண் முதல்வர் ஜெயலலிதா என்ற தாளும், ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவின் வெற்றியை பற்றி விமர்சித்து எழுதப்பட்ட பதாகைகளையும் வைத்தபடி அவர் பேசினார்.
அதைக்கண்டு ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள், அதைப் பறித்துக்கொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சற்று நேரத்தில் வாக்குவாதம் முற்றி, இருதரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக, திமுக கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர்.
இதில் திமுக கவுன்சிலர் மீனாவை, அதிமுக கவுன்சிலர்கள் சூழ்ந்தபடி தாக்கினர். குறிப்பாக அதிமுக பெண் கவுன்சிலர் அன்னம்மாள், திமுக கவுன்சிலர் மீனாவை சரமாரியாக தாக்கினார். அதிகாரிகள் தடுத்தும் கவுன்சிலர்கள் தங்கள் சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்தனர். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.