மாத்திரை வடிவில் 25 லட்சத்தை விழுங்கிய கொலம்பியா பெண் கைது
கொலம்பியா நாட்டில் ரூ.25 லட்சம் மதிப்புடைய கரன்சி நோட்டுக்களை மாத்திரை வடிவில் சுருட்டி வயிற்றுக்குள் விழுங்கி கடத்திய பெண் ஒருவரை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவின் போகோடோ விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கமான சோதனையை செய்து கொண்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை பெண் அதிகாரிகள் மூலம் சோதனை செய்தனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் நிறைய கேப்சியூல் மாத்திரை அளவில் வில்லைகளாக்கி விழுங்கி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவருடைய வயிற்றுக்குள்ளிருக்கும் மாத்திரை அளவிலான வில்லைகளை வெளியே எடுத்து சோதித்த போது ஒவ்வொரு கேப்சியூலிலும் ரூபாய் நோட்டுக்கள் சுருட்டி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில் மொத்தம் 25 லட்சத்து 2,500 ரூபாய் மதிப்புடைய நோட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீஸார் அந்த பணம் எப்படி சம்பாதிக்கப்பட்டது என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.