போதை பொருள் கடத்திய கொலம்பிய மாடல் அழகிக்கு மரண தண்டனையா? பெரும் பரபரப்பு
கொலம்பியா நாட்டை சேர்ந்த 22 வயது பிரபல மாடல் அழகி ஒருவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவை சேர்ந்த 22 வயது மாடல் அழகி ஜுலியானா லோபஷ். இவர் சமீபத்தில் சீனாவுக்கு விமானப்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது, தனது கம்ப்யூட்டரில் போதை பொருளை மறைத்து வைத்து கடத்தி சென்றதாக சீனப் போலீஸாரிடம் பிடிபட்டார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது போதை பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் போதை பொருள் கடத்தல் என்பது மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு பெரும் குற்றமாக கருதப்படுகிறது. எனவே இவருக்கு மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் எழுதி வருகின்றன.
இதனிடையே மாடல் அழகி ஜுலியானாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஜுலியானா எங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. தலைநகர் பீஜிங்கில் உள்ள கொலம்பியா தூதரகம் மூலம் அவரை தொடர்பு கொள்ள குடும்பத்தினர் தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.